Jan 16, 2011

இசைக் கோலங்கள் - ஊரெல்லாம் உன் பாட்டு

முன்குறிப்பு: இந்தப் பாடல் என் டாப் டென் பாடல் லிஸ்டில் ஒன்று.

இந்த வார்த்தைகளை இதுவரை ஆயிரத்தியெட்டு பேர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். இதோ நானும் சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள். "மோகனுக்கும் ராமராஜனுக்கும் அமைத்துத் தந்த பாடல்கள் போல் ரஜினிக்கும் கமலுக்கும் கூட இளையராஜா அமைத்துத் தந்ததில்லை"


இந்த வார்த்தைகள் அப்படியே நிஜமில்லை என்றாலும் சில நேரங்களில் சில பாடல்களைக் கேட்கையில் "அப்படித்தானப்பா" என எண்ணத் தோன்றுகிறது. ஊரெல்லாம் உன் பாட்டு படத்தின் இந்தப் பாடல் அப்படிப்பட்ட ஒரு பாடல்.

கிராமராஜனுக்கு என வந்த "மாங்குயிலே பூங்குயிலே", "கலைவாணியோ ராணியோ" போன்ற கிராமிய மனம் கவழ்ந்த பாடல்கள்; செண்பகமே, தானா வந்த சந்தனமே போன்ற மெல் மெல் மெலடிகள்; மதுர மரிக்கொழுந்து போன்ற துள்ளல் டூயட்கள் என இவைதான் ராமராஜனின் அடையாளம் என்று இருந்தது. 

ஆச்சர்யம் தரும் வகையில் வெளிவந்த ஒரு செமி கிளாசிகல் ரகப்பாடல் ராமராஜன் படத்தில் என்றால் அது இந்தப்பாடலாக மட்டுமே இருக்க முடியும்.  ராமராஜனுக்கு யேசுதாஸ் அவர்கள் குரல் ஒலிப்பதும் ரொம்பவே அபூர்வம். பெரும்பாலும் மெலடிகளுக்கு மனோ அல்லது எஸ்.பி.பி., எப்போதாவது அருண்மொழி, நையாண்டி / குத்துப் பாடல்களுக்கு மலேசியா வாசுதேவன் என இருக்கும் ராமராஜன் பாடல்கள். அப்படிப் பார்த்தாலும் யேசுதாஸ் குரலாக ஒலிக்கும் இந்தப் பாடல் ஒரு தனித்தன்மைப் பாடல்.

யேசுதாஸ் அவர்களின் தெள்ளத் தெளிவான ஆளுமையை இந்தப் பாடலில் நாம் உணரலாம். பாடலுக்குத் தேவையான கிளாசிக்கல் டச்'சுடன் நச்சென்று சங்கீதசாகரம் அவர்கள் பாடுவதை நாம் பாடல் முழுக்க உணரலாம். கல்யாணி ராக அடிப்படையில் அமைந்த பாடல் என்பது என் அனுமானம். மற்றபடி பாடலின் கமகங்கள், ஸ்தாயிகள், இதர நுணுக்கங்களை அலச நாம் இப்போதைக்கு லலிதராமைத்தான் அழைக்க வேண்டும்.

இவ்வளவு தூரம் பாடலைப் பேசிவிட்டு நம்ம தலைவர் ராமராஜன் பற்றி இரண்டொரு வார்த்தைகள் பேசாவிட்டால் நமக்கு நரகம் நிச்சயம். நம்ம தலைவர் அம்மனை நினைத்து உருகிப் பாடுவதும், படத்தின் ஹீரோயினி இவர் தன்னைப் பற்றித்தான் பாடுகிறார் என நினைத்துக் கொள்வதுவும் பாடலின் முக்கிய ஹைலைட். அப்படியொரு அர்த்தம் கொண்ட பாடலாக இப்பாடலைச் சமைத்த கவிஞர் வாலி அவர்களின் திறமையை என்னவென்று சொல்வது?

ரொம்பவும் பிரயத்தனப் படாமல் தன் முந்தைய எண்ணூற்று சொச்ச பாடல் வரிகளிலிருந்தே அர்த்தங்களை மையமாய்க் கொண்டாலும், வரிகளை அமைத்த விதத்தில் பாடலின் சந்தத்தை தூக்கி நிறுத்துகின்றன வாலிபக் கவிஞரின் வசீகர வரிகள்.

உன்னிடம் சொல்வதற்கு…
எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு
அதை நீயும் கேட்க நானும் சொல்ல 

ஏது வாசகம்


ச்சே... கவிஞன் கலக்குறானையா....!!!

இங்கே நான் இணைத்திருக்கும் யு.டியூப் இணைப்பு ஆடியோ மட்டும் கொண்ட இணைப்பாக இருக்கிறது. முடிந்தால் ஹெட்போனில் பாடலை கேட்டு ரசியுங்கள்.

பாடல் வரிகளுக்கு இங்கே


படங்கள் -நன்றி: இசைத்தேன்
.
.
.

5 comments:

Jawahar said...

ராமராஜனுக்கு ராஜா போட்டதில என் ஃபேவரைட் ‘இந்தமான் உந்தன் சொந்தமான்’ ஆர்.டி.பர்மன் பல பாடல்கள்ளே பூந்து விளையாடின பஹாடி ராகத்தில ராஜாவோட மாஸ்டர்பீஸ்!

http://kgjawarlal.wordpress.com

Giri Ramasubramanian said...

@ ஜவஹர்
சார், தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

ஆர்.டி.பர்மன், பஹாடி ராகம் என்றெல்லாம் பேச என் சிற்றறிவிற்கு சரக்கு பத்தாது. தங்கள் வாயிலாக இந்த கூடுதல் தகவல் அறிந்தமைக்கு சால சந்தோஷமுலு. அவ்வப்போது வந்து நான் கிறுக்கும் "இசைக் கோலங்களுக்கு" தங்கள் பயனுள்ள பின்னூட்டங்களை அளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

மறைந்த என் சகோதரி ஒருவரை "இந்தமான்" பாடல் எனக்கு நினைவூட்டுகிறது. அவர் மிகப் பெரிய ராஜா விசிறி. ராஜாவின் பாடல்களை வெறித்தனமாக திரட்டி வைத்திருந்தார். சில வருடங்கள் முன் பெங்களூரில் நாங்கள் ராஜாவின் பாடல்கள் கசியக் கசிய காரில் சுற்றிக் கொண்டு ஷாப்பிங் செய்த அனுபவம் மறக்கவியலாதது.

சுபத்ரா said...

Nice song.. Thank u for sharing.

Giri Ramasubramanian said...

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுபத்ரா!

தனிமரம் said...

nala pativu ivalavu nal pargavilai ini ungalai thodarvan

Related Posts Plugin for WordPress, Blogger...