Nov 21, 2011

சுதந்திர போராட்ட தியாகி ஷெய்தி ராம்




1942 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 8 ந்தேதி அப்போதைய பம்பாயில் கூடிய, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் தேசத்தந்தை காந்தி அனல் பறக்க பேசுகிறார். "இனியும் பொறுக்கமுடியாது,உலகப்போரின் காரணமாக ஆங்கிலேயே அரசின் மீது கொண்டிருந்த பச்சதாபம் முடிந்துவிட்டது. இனி இந்த ஆங்கிலேயே அரசை எதிர்த்து போர்ப்பிரகடனம்தான்.'' "செய் அல்லது செத்துமடி''; "இந்த வெள்ளையர்கள் நம்மைவிட்டு போகும்வரை அவர்களுக்கு எந்தவிதத்திலும் ஒத்துழைப்பது இல்லை.இந்த ஒத்துழையாமை இயக்கத்தில் ஒவ்வொருவரும் போர் வீரர்கள் போல செயல்படவேண்டும்''.


காந்தியின் இந்த வெள்ளையரை வெளியேற்றும் அறைகூவல் போராட்டம் ,மக்களிடையே "வெள்ளையனே வெளியேறு' போராட்டமாக எழுச்சியுடன் வெடித்தது. நாடு முழுவதும் காங்.தலைவர்களும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் வடமாநிலத்தில் இருந்தால் 1300 கிலோமீட்டர் தாண்டி தென் மாநில சிறையில் அடைக்கப்பட்டனர்,தென் மாநிலத்தை சேர்ந்தவர் என்றால் வடமாநிலத்தில் அடைக்கப்பட்டனர்.



நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னெடுத்துச் செல்லப்பட்ட இந்த முக்கிய போராட்டத்தில் பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்றனர். ரயில்கள் மறிக்கப்பட்டது, பஸ்கள் நிறுத்தப்பட்டது, அரசு அலுவலகங்கள் முடக்கப்பட்டது, போரட்ட களத்தில் நின்ற பொதுமக்களில் ஒருவர்தான் இன்றைய ஜார்கண்ட் மாநிலம் கூடா மாவட்டத்தை சேர்ந்த ஷெய்தி ராம்.



வெள்ளையனே வெளியேறு கோஷத்துடன் போராட்ட களத்தில் இறங்கிய ராமை ஆவேசத்துடன் இருந்த போலீசும், ராணுவமும் தனது குண்டாந்தடிகளால் பந்தாடினர். குற்றுயிரும் குலைஉயிருமாக உடம்பெல்லாம் ரத்தம் வழிய வீழ்ந்து கிடந்தாலும், உதடுகள் மட்டும் வெள்ளையனை வெளியேறச் சொல்லும் கோஷமிட்டது. ராமைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்தும் அடித்து துவைத்தனர்,இனி ஆள் தாங்கமாட்டார் என்ற நிலையில் விடுதலை செய்தனர். வெளியே வந்தவர்,கொஞ்சம் தெம்பு வந்ததும் மீண்டும் போராட்ட களம் சென்றார், மீண்டும் கைதானார். மீண்டும் தடியடி தாங்கினார். மீண்டும் சிறை சென்றார்.



இப்படியே எவ்வளவு நாள்தான் போராடுவாய் என்ற கேள்விக்கு, " எங்கள் நாடு சுதந்திரமடையவேண்டும் ,அந்த உணர்வு இருக்கும்வரை போராடுவேன்'' என்று பதில் தந்து இருக்கிறார். "சரி இந்த உணர்வு எத்தனை நாள் இருக்கும்'' என்ற அடுத்த கேள்விக்கு ""உயிர் இருக்கும் வரை என் உணர்வு இருக்கும்'' இந்த முறை பதில் சற்று உரத்தே வந்தது



இப்படி பொங்கி வழிந்த தேசபக்தியோடும், தன் மணைவி ஷாம்னி தேவியோடு பல முறை போராட்டத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்கு சென்ற ராம், நாடு சுதந்திரமடைந்ததும் நாட்டிற்கான தனது கடைமை முடிந்தது என விவசாய தொழிலில் இறங்கினார். சுதந்திர போராட்ட வீரர்கள் பலரும் பெட்ரோல் பங்கு முதல் பென்ஷன் வரை வாங்கிக்கொண்டு வளமாகவும்,நலமாகவும் இருக்கிறார்கள்,நீங்கள் ஏன் இதற்கு முயற்சிக்க கூடாது என்ற போது,எதையும் எதிர்பார்த்து நான் என் நாட்டிற்காக போராடவில்லை,என் உழைப்பு என்னைக்காப்பாற்றும் என்பதே ராமின் பதிலாக இருந்தது



வருடங்கள் உருண்டோடின. இப்போது ஷெய்தி ராமிற்கு வயது 99 அவரது மனனவி ஷாம்னி தேவிக்கு வயது 85. மனதில் தெம்பு இருந்தாலும் உடம்பில் தெம்பு இல்லாததால், வாழ்வாதரத்திற்காக சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான பென்ஷன் கேட்டு விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பங்கள் கேலியுடனும்,கிண்டலுடனும் நிராகரிக்கப்பட்டன



தமிழகத்தில் ஏழாயிரமாகவும், கர்நாடகா மாநிலத்தில் ஆறாயிராமாகவும், மகராஷ்ட்ரா மாநிலத்தில் ஐயாயிரமாகவும் குறைந்து கொண்டே போய் ஜார்கண்ட் மாநிலத்தில் மூவாயிரம்தான் "பென்ஷனாக' சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்குகிறார்கள். அந்த மூவாயிரத்தை கேட்டு நடையாய் நடந்தும், அரசு அலுவலகங்களில் கிடையாய் கிடந்தும் எதுவும் பலனில்லை.



எங்களை தியாகியாக கூட மதிக்கவேண்டாம், வயதானவர்களாக மதித்து முதியோர் பென்ஷனாவது வழங்குங்கள், மிச்சமுள்ள வாழ்க்கையை யாரிடமும் தஞ்சமடையாமல் மானத்தோடு வாழவழி காணுங்கள் என்றபோதும் அதற்கும் வழியில்லாமல் போனது. பொறுமை இழந்த இந்த சுதந்திர போராட்ட தம்பதிகள் கடந்த 05/11/11 ந்தேதி ராஞ்சியில் உள்ள கவர்னர் மாளிகை முன் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்



போதுமான ஆவணங்கள், சான்றுகளுடன் உண்ணாவிரதமிருந்த இந்த தியாகிகளை உடனடியாக கவர்னர் கூப்பிட்டு முறைப்படி நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். ஆனால்... ஆனால்... கவர்னர் மாளிகை வாசலை அசிங்கப்படுத்தும் இவர்களை அப்புறப்படுத்துங்கள் என்று வந்த உத்திரவை அடுத்து போலீசார் இவர்களை குண்டு கட்டாக அள்ளிச் சென்று விட்டனர்



அப்புறப்படுத்தும் இடத்தில் முன்பு குப்பைகூளங்கள் இருந்தது



இப்போது சுதந்திர போராட்ட தியாகிகள்


நன்றி: தினமலர் மற்றும் இந்த இணைப்பை பகிரச் சொன்ன ரகுபாஸ்கர்

1 comment:

Giri Ramasubramanian said...

@ திண்டுக்கல் தனபாலன்

மெத்த மகிழ்ச்சியும் மிக்க நன்றிகளும் சார்!

Related Posts Plugin for WordPress, Blogger...