Apr 6, 2012

கலி - நிமிஷக்கதை


நன்றி: நட்பாஸ்
இது ஒரு அப்பட்டமான நிஜக்கதை! இந்தக் கதை லைவ்லி ப்ளாண்ட் தளத்தில் வந்தபோது டாக்டர்.வரசித்தன் இட்ட இந்தப் பின்னூட்டம், கதைக்கு.... இல்லையில்லை இந்த நிஜத்தின் அர்த்தத்திற்கு மேலும் வலு சேர்த்தது. சேர்த்த வலு குழப்பத்தில், சோர்வில் நம்மைத் தள்ளியது வேறு கதை.
சரி சரி, நீங்கள் கதையைப் படியுங்கள்.
ப்ரேக் அடித்து நின்றது பேருந்து. “க்ளோபல், தமிழ்நாடு எல்லாம் எறங்கு”, கண்டக்டர் கூவ…. அருகில் அமர்ந்திருந்த பெரியவர் இறங்குவதற்கு படிக்கட்டு வரை துணைசென்றவன் திரும்பி வந்து பார்த்தால் அமர்ந்திருந்த இருக்கை ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியிருந்தது.
அடுத்த நிறுத்தத்தில் ஒரு திருவிழாக் கூட்டம் பேருந்தை நிறைத்து இருக்கையைத் தவறவிட்டதன் பலனை உணரவைக்கத் துவங்கியது. அதற்கும் அடுத்த நிறுத்தத்தில் இன்னொரு புளி மூட்டைக் கும்பல் பேருந்துக்கு மேலும் பலம் சேர்க்க, சுற்றி நின்ற நாலுபேர் என்னை நெறித்துக் கொண்டிருந்தார்கள்.
“சார், கொஞ்சம் வழிவிடுங்க, ப்ளீஸ்! ஓரமா போய் நின்னுக்கறேன்”
“உன் பையை எடுத்து யார்ட்டனா குடு நைனா. அத்த குட்த்தாலே நாலு ஆளுக்கு எடங்கெடைக்கும்”
“ஒரு சோழிங்கநல்லூர் வாங்குங்க”, அழகிய இளமஞ்சள் கரம் என் பக்கம் நீண்டது.
“ஓரமாய்ப் போய் நின்னுக்கறேன்” திட்டத்தை அவசர அவசரமாகத் தள்ளிப் போட்டுவிட்டு நீட்டப்பட்ட நோட்டை வாங்க்கிக் கொண்டேன். நான் சரியாகப் பேருந்தின் மத்தியில் பிதுங்கிக் கொண்டிருந்தேன். இன்னொரு “பாஸ்” செய்தால்தான் சோழிங்கநல்லூரை வாங்குவது சாத்தியம்.
“கொஞ்சம் ஒரு சோழிங்கநல்லூர் வாங்குங்க”
“சார், கொஞ்சம் ஒரு சோழிங்கநல்லூர் வாங்குங்க”
“எக்ஸ்க்யூஸ்மி”
“??”
“ஒரு சோழிங்கநல்லூர்”
“கையே வெள்ள எட்க்க முட்லபா”
மகளிர் இருக்கைகள் இருந்த பக்கத்தில் கண்டக்டருக்கு மூன்று இருக்கை இடைவெளியில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணின் முகம் தெரிந்தது. அவள் என்னையே நிலைக்குத்திய பார்வை பார்க்க, “மேடம், ஒரு சோழிங்கநல்லூர் பாஸ் பண்ணுங்க”.
பதிலில்லை. ஆனால், அதே நிலைகுத்திய பார்வை. “கொஞ்சம், பாஸ் பண்ணுங்க ப்ளீஸ். ஒரு சோழிங்கநல்லூர்”. மீண்டும் அதே பதிலில்லாப் பதில். மீண்டும் வேண்டுதல், மீண்டும் கேளாமை. நான் சொல்வதை அப்பெண்மணியை கேட்க வைத்துவிட வேண்டும் என திடீர் உத்வேகப் பிடிவாதம் எனக்கு வந்தது. அவள் முகத்திற்கு நேரே பணத்தை நீட்டி, மேடம், மேடம் எனக் கத்தி, மேலும் ஒரு அரை டஜன் வித்தியாசமான முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டு, “என்னப் பொம்பளடா இவ”, என பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டேன்.
திடீரென ஒரு கை என் கையிலிருந்து பணத்தைப் பிடுங்கி ஓரிரு நிமிடங்களில் சோழிங்கநல்லூரை என் கையில் திணித்தது. இப்போதும் அப்பெண் என்பக்கம் அதே முறைத்தல் பார்வையை வீசிக்கொண்டிருந்தாள். இருபதுகளின் மத்தியில் மாநிறத்தில் மெல்லிசான களைகூடின வசீகர முகம். என்ன பிரச்னை உனக்கு என ஒரு அசட்டையாக வெறுப்புப் பார்வையை நான் பதிலுக்குத் தந்துவிட்டுத் திரும்பிக் கொண்டேன்.
சோழிங்கநல்லூர் ஜங்ஷனில் கொஞ்சம் கூட்டம் கரைந்து மூச்சு விட அனுமதித்தது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கவேண்டியதுதான். இப்போது அந்த முறைப்புப் பெண்மணியைத் திரும்பிப் பார்த்தேன். இது சினிமாவாக இருந்திருந்தால், என் அதிர்ச்சியை வெளிப்படுத்த அப்பேருந்து ‘சடன்’ ப்ரேக் அடித்து ”ஹ்ஹ்ஹ்ர்ர்ர்ர்ரீஈஈஈஈ”, என ஓலமிட்டு ஓசையுடன் நின்றிருக்கவேண்டும். அவள் நின்ற திருக்கோலம் இப்போதுதான் முழுசாய்த் தெரிந்தது. பச்சிளம் கைக்குழந்தை ஒன்றைக் கையில் ஏந்திக் கொண்டு நின்றிருந்தாள். தன் முகத்தால் அவள் மார்பை முட்டிக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை. சேலையை விலக்கிவிட்டு குழந்தையை உள்நுழைத்து விட்டாள் அவள்.
பிள்ளையைப் பெற்றவர்கள், பெறப்போகிறவர்கள், பெற்றுக் கொண்டிருக்கக்கூடாதவர்கள், பெற்றுக் கொள்ளக்கூடாதவர்கள் என அத்தனை வகைப் பெண்களும் அமர்ந்த திருக்கோலத்தில் அதைத் தரிசித்துக் கொண்டேயிருந்தார்கள்.
image credit : usefilm.com

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

இப்படித்தான் இருக்கிறது கலி!.....

Related Posts Plugin for WordPress, Blogger...