Jul 6, 2015

அந்திப்போதின் ஆதர்சங்கள் - 1

நூறு நாற்காலிகளில்இந்த களசமும் சட்டெயும் வேண்டாம்லே.. நீ தம்றான்மாருக்க கசேரியிலே இருக்காதே... என்னோட வா! வந்துடு”, என்பாள் தர்மபாலனின் (கலெக்டரின்) அம்மா.

அந்தப் பைத்தியக்காரக் கிழவியின் இரைஞ்சுதலை வாசித்தபோது அன்று ஒருநாள் நண்பனின் வீட்டிற்குப் போயிருந்த வேளையில் அவன் தாத்தா தன் பிள்ளையிடம் கிசுகிசுத்தது ஏனோ நினைவுக்கு வந்தது.

நூறு நாற்காலிகள் தர்மபாலனுக்கும் நண்பன் வாசுவின் அப்பாவுக்கும் ஏதும் தொடர்பில்லை என்றாலும், இரண்டு பெருசுகளின் இரைஞ்சுதல்களுக்கும் ஏதும் தொடர்பு இருந்திருக்குமோ என்று எனக்குத் தோன்றும்.

தும் அசாதாரண சந்தர்ப்பங்களிலேயே வாசு வீட்டிற்கு நான் செல்வது முறை என்றாகிவிட்டது. போனவன் போன கதியில் புறப்படவும் முடியாமல், அங்கே உட்காரவும் இயலாமல் சங்கடமாகிப் போனது. நல்லவேளையாக இன்று பாபுவும் வந்திருந்தான். சுஜாதா புத்தகம் இரவல் கேட்க வந்தவன். வாசு வீட்டில் நிலைமை சரியில்லாததால் கையைப் பிசைந்து கொண்டு உட்கார்ந்திருந்தான். என்னைப் பார்த்ததும் வாடா என்ற பாவனையில் ஒருவித வலி பரவிய முக பாவத்தில் என்னை வரவேற்றான்.

வாசுவும், பாபுவும் என் பள்ளித் தோழர்கள். வருடங்கள் கடந்தும் நான்கைந்து தெரு வித்தியாசத்தில் ஒரே ஊராகிவிட்டபடியால் நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது. நான் இப்போது அங்கே எதற்காகப் போனேன் என்பதையும் மறந்து வாசுவின் தாத்தாவையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

”ஒத்த நாடிதான் கேக்குது. மதியத்துக்குத் தாங்காதுன்னு தோணுது”, ஃபிர்தோஸ் அண்ணன் சொல்லியது.

வாசுவின் அப்பா ஃபிர்தோஸ் அண்ணனைப் பரிதாபமாகப் பார்த்தார். வரட்வரட் என்று தன் வெற்று மார்பில் நான்குமுறை தானே பிராண்டிக் கொண்டு, “ஆஸ்பத்திரிக்கி வேணா இட்டுனு போயி பாத்தா என்ன ஃபிர்தோஸு”

“ஆஸ்பத்ரிலருந்துதான கைவுட்டாங்கன்னிட்டு இட்டாந்த? இன்னா ஏதுன்னு புரிஞ்சுதுன்னா வைத்தியம் பாக்கலாம். ஒன்னியும் புரியாம நீட்டிக்கினு பட்த்துனு கெட்ந்தா இன்னானு பாத்துக்குவ?”, இது வாசு அம்மா. 
 
வாசுவின் அப்பா தன் மனைவியை ஒரு முறைப்பு கலந்த பார்வையோடு பார்க்க அதையெல்லாம் பொருட்படுத்தாமல், "எவ்ளோ நேரம் தாங்குன்னு சொல்லு ஃபிர்தோஸு. மேல நடக்கறத பாக்கணும்”.

"மொதலியார்.... மொதலியார்!”, ஃபிர்தோஸ் அண்ணன் தாத்தா தாடையைத் தட்டிப் பார்த்தது. ஒரு அசைவையும் காணோம். “மொதலியாருக்கு புடிச்சாப்போல விஷயம் என்னது?”

“அப்பாவுக்கு நண்டுன்னா உசுரு. மிச்சம் வெக்காம துன்னும்”

“ஆமாம், பங்குனி மாசத்துல நண்டு கொணாந்து விக்கறான் உம் மாமனாரு”,  மீண்டும் வாசுவின் அம்மா.

“அண்ணே! நாடியே ஒத்தைதானண்ணே? அதுக்கும் மேல எதான கேக்குமா என்ன?”, பாபு அண்ணனைக் கேட்டான். அண்ணனுக்குக் கேட்டதா; இல்லை பொடியனுக்குப் பதில் சொல்ல அண்ணனுக்கு விருப்பமில்லையா என்று தெரியவில்லை. தாத்தாவின் தாடையையே பிராண்டிக் கொண்டிருந்தது அண்ணன்.

”டேய்! நீயான சொல்றா”, வாசு காதில் கிசுகிசுத்தான் பாபு.
”இப்பிடிக் ஊருக்கே கேக்குறாப்புல காதுல கிசுக்காதேன்னு எத்தினி தரவடா உன்ட்ட சொல்றது? சாதாவா எல்லாருக்கும் ரெண்டு நாடி சத்தம் கேக்கும்னு நெனைக்கறண்டா”

“அண்ணன் ஆட்டோதானடா ஓட்டும், நாடில்லாம் பாக்குது?” கேட்டவனை வாசு முறைத்தான்.

“ஏண்டா, எதான சாப்பிட்டாரா தாத்தா?”

“தண்ணி ஊத்தினா கூட உள்ள போவல. ஒரு உம் ஊஹூம் சத்தம் கூட இல்லைடா அவராண்டருந்து. முழுசா ஒருநாள் ஆச்சு. அப்டியே கெடக்கறாரு”

“அப்போ ட்ரிப்ஸாவது ஏத்தணும்டா.  டேஞ்சரில்ல?”

“எல்லாம் ஏத்தினாங்க. ஒண்ணும் தேறாதுன்னுதான் அனுப்பி வெச்சுட்டாங்கடா”

மூன்றுக்கு எட்டு அகலத்தில் நீள்வாக்கில் இருந்தது அந்த இருண்ட அறை. வீட்டிற்கு வெளியே திண்ணையை ஒட்டி உள்ளே ஒடுங்கியபடிக்கு இருந்த அறை. ஒற்றைப் பெஞ்சில் கிடத்தியிருந்தார்கள் தாத்தாவை. ஆறரை அடி மனிதருக்கு ஐந்தரை அடி பெஞ்ச். கணுக்காலுக்குப் பிறகான மிச்சம் பெஞ்சுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. அழுக்கு வேட்டியும், ஷேவ் செய்யாத தாடையுமாக இருந்தார் தாத்தா.

“தம்பி வூட்டுக்கு, சம்பந்தி வூட்டுக்கெல்லாம் சொல்லி வுட்டுடு வாசப்பா”

“இன்னா ஃபிர்தோஸு இப்டி பேசிக்கின”, தேம்பலாகக் கேட்டார் வாசு அப்பா.

“வந்தவங்கல்லாம் போறவங்கதான். வா வா! இப்டி குந்து. நான் சட்டை எட்த்தாறன். பொறப்படுவியா பாரு. அடுத்தடுத்த வேலையப் பாக்கணும், பொறப்புடு”

“ஏண்டி, கொஞ்சமான நெஞ்சத்துல ஈரத்தோட எண்ணிக்கித்தாண்டி பேசுவ நியீ”

“நெஞ்சத்துல ஈரத்தோடதான் என்னை வாழ வெச்சாங்க இந்த வூட்டுல உன் அப்பனும் ஆத்தாளும். அந்த ஈரத்த தொட்ச்சி திருப்பித் தர்றாங்க வா”

”முப்பது வர்சமா கேட்டுட்டண்டி. இன்னைக்கு பட்த்துங்குறான் மனுசன். இங்கயும் அத்தையே பேசாத. இன்னா ஃபிர்தோஸு, சீரிசாதான் சொல்லிக்கினியா?”

“என்ன வாசப்பா, இதுலல்லாம் விளையாடுவாங்களா யாராது? பல்ஸு சுத்தமா டவுனு வாசப்பா. மதியத்துக்கு தாங்கமாட்டாரு”

”சரி நீங்க பொறப்படுங்கடா. எதானன்னா நான் சொல்லுவுடறேன்”, எப்போது சொல்வான் என்று காத்திருந்தது போல், “வாடா”, எழுந்துவிட்டான் பாபு. ஒரு அரை நிமிட யோசனைக்குப் பின் நானும் நிதானமாக எழுந்து புறப்பட்டேன்.
 
மாலையில் எதேச்சையாக அந்தப்பக்கம் போவது போல் வாசு வீட்டைக் கடந்து போனேன். இருளும் அமைதியும் கவிந்து கிடந்தது வீடு. ஐந்து நிமிடம் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தேன். வீட்டில் ஏதும் சலனமில்லை..... ஏதும் சேதியில்லை எனத் தெரிந்து. திரும்பிவிட்டேன்.
 
இரவு தூங்க வெகுநேரம் பிடித்தது. தாத்தாவின் யோசனையாகவே இருந்தது.
 
வாசு அப்பா வீட்டுக்குப் பெரியவர். அவராந்டன் பிறந்தது இரண்டோ மூன்றோ தம்பிமார்கள். எல்லா வீட்டுக் கதைகளையும் போல் அண்ணன் தம்பிகள் கல்யாணம் முடிக்கும்வரை ஒற்றுமையாக ஒரே வீட்டில் இருந்திருக்கிறார்கள். புளியந்தோப்பில் வீடு. தாத்தா பிஎன்சி’யில் வேலை பார்த்தவர். காலத்தின் போக்கில் அண்ணன் தம்பிகள் நகரின் ஒவ்வொரு மூலையில் செட்டிலானார்கள். மில் நிர்வாகத்திடம் கோர்ட் கேஸ் என்று மன்றாடி தங்கியிருந்த வீட்டையும் விட்டு தாத்தா வெளியில் வந்த வேளையில் பாட்டி காலமானார்.
 
பிள்ளைகள் தாத்தாவை இங்கும் அங்கும் என பந்தாடி, அவர்களுக்குள் சண்டைகள் போட்டுக் கொண்டு கடைசியில் அவரை வாசு வீட்டில் நிரந்தரமாகத் தள்ளிவிட்டனர். வாசுவின்  அம்மா எவ்வளவு பேசினாலும் வீட்டு வாசலின் கொட்டகை அறையில் வைத்தாவது மாமனாருக்கு மூன்று வேளை கஞ்சி ஊற்றிக் கொண்டிருந்தாள். அண்ணன் தம்பிகளுக்குள் நிரந்தரச் சண்டை என்றாகிப் போனது. சித்தப்பன்கள் பல வருடங்களுக்கு வந்து பார்த்தார்கள் இல்லை.
 
சென்றமுறை வாசு வீட்டிற்குப் போனபோது தாத்தா நடமாட்டம் தளர்ந்து பேச்சு குழறி என அப்போதே ஏதோ தயாராகி விட்டிருந்தார்.  “ராகவா! என்னை புளியாந்தோப்பு கோட்டார்சுக்கு இட்டுனு போய்டேம்பா”, தன் மருமகள் பக்கத்தில் இல்லை என்பதை ஊர்ஜித்துக் கொண்டு கிசுகிசுப்பாய் மகனிடம் கேட்டார்.
 
“அங்க யார் வூடு இருக்கு உனுக்கு? எங்க தங்குவ? யாரு சோறு போடுறா? அதான் மேனேஜ்மெண்ட்டு ஆப்பு வெச்சி அனுப்பிட்டான்ல. சொம்மா படுப்பா”,
 
”நீயும் என்னோடியே வந்துடு ராகவா.... புள்ளைங்க மூணும் உம் பொண்டாட்டிய பாத்துக்கும்”
 
“அதெல்லாம் கண்டுக்காத தம்பி. பெருசுக்கு ரொம்ப வயசாயிடுச்சி. என்னா பேசறதுன்னே தெரியாம பேசுது”, என்னைப் பார்த்து ஏதோவொரு வலியோடு அன்று சிரித்தார் வாசுவின் அப்பா.
 
காலையில் வீட்டுக்குப் பால் ஊற்றும் அண்ணன் வழியே செய்தி வந்து சேர்ந்தது.

”தம்பி இங்க வாப்பா. ஏய் உன்னத்தாய்யா திலக்! ஏ திலக்!”, வாசுவின் சித்தப்பா என்னைப் பார்த்து கை அசைத்தது.

”என்னையா கூப்டறீங்க” என்று நின்ற இடத்தில் கேட்டேன்.

“அட வாய்யா. திலக்தான உம்பேரு?”

“இல்ல. ஹரி... ஹரிராம்.”

”ஆங், ஹரி. வாய்யா. வாசு க்ளாஸ்மேட்தான நீ? நீதான இந்த கவிதையெல்லாம் எழுதுவ. புக்குல்லாம் போட்டுருக்க”

அவரிடம் வம்படியாக எனக்குக் கவிதையெல்லாம் வராது என்று சொல்ல மனமின்றி தலையை ஒரு உருட்டு உருட்டி ஆமாம் என்றேன். ஆனால் பல வருடமாக இந்த வீடு வாராதவருக்கு என்னைப் பற்றின தகவல் எப்படித் தெரியும் என்று யோசித்துக் கொண்டிருந்தவனிடம்....
 
”டேய்.... நாந்தாண்டா நீ வந்தா ப்ரூஃப் பாத்து குடுப்பன்னு சொன்னேன்”, என்றான் வாசு.
 
”இந்தா, இரங்கலுக்குப் போட்டுருக்கேன் போஸ்டரு. எப்டி இருக்கு பாரு”, என்றார் சித்தப்பா.

”துணையாய் இருந்தாய்;
துணிவாய் இருந்தோம்.
உதிர்ந்து போனாய்’
அதிர்ந்து போனோம்”

என்றது போஸ்டர். வாசு அண்ணனின் கல்யாணத்தில் எடுத்த ஃபோட்டோவை வெட்டி எடுத்தது என நினைக்கிறேன், ஃபோட்டோவில் தாத்தா அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்.

5 comments:

natbas said...

யதார்த்தம்!

Giri Ramasubramanian said...

ஆமாம் நட்பாஸ் ஜி,
எத்தனை வருஷங்கள் கடந்தாலும் மறக்க முடியாத, ஜீரணித்து ஒழிக்க முடியாத யதார்த்தம்.

எப்படியோ ஒருவழியா தொடரைத் தொடங்கிட்டேன். இனி ஆண்டவன்தான் வழிநடத்தணும்

natbas said...

சொல்றதுக்கு விஷயம் இருக்கே, அவசியம் எழுதுங்க, நல்லா இருக்கு இல்லை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். நன்றி

netodaez said...

y145r4sbhqg310 vibrating dildos,anal toys,horse dildo,penis sleeves,fantasy toys,male sexy toys,vibrators,prostate massagers,Clitoral Vibrators d380l9bfmym157

nayquad said...

x515s6vsvsn059 male sex toys,dildos,sex toys,vibrators,penis rings,cheap sex toys,dual stimulator,women sexy toys,dildos d486h0rirjc047

Related Posts Plugin for WordPress, Blogger...