Jul 3, 2018

பூஜா - ஷோயப் - ஏர்டெல்

நீங்கள் ஒரு கடையில் விற்பனையாளராகப் பணி புரிகிறீர்கள் எனக் கொள்வோம். வாடிக்கையாளர் ஒருவர் உங்களிடம் ஏதோ ஒரு பொருளைக் கேட்க வருகிறார். பொருள் குறித்த விவரத்தைக் கேட்ட பின் (உதா: கடலைப்பருப்பு ஒரு கிலோ என்ன விலை? ), உங்கள் சட்டைப்பையில் நீங்கள் குத்தி வைத்திருக்கும் உங்கள் பெயர்ப் பட்டையைப் பார்க்கிறார்.

"ஓஹோ! இதான் உன் பேரா? நீ இந்த இனத்தை / சாதியை / மொழியைச் சேர்ந்தவனா?", என்று கேட்டுவிட்டு உங்கள் முகத்தில் சப்பென்று ஒரு அறை விடுகிறார்.

சரி, வேண்டாம். "உன்னோட பேசிப் பொருள் வாங்க எனக்கு விருப்பம் இல்லை. வேற யாரையாவது வரச்சொல்லு", என்கிறார்.

இதைக் கவனித்துக் கொண்டிருக்கும் உங்கள் முதலாளி அங்கே கடையில் அந்த வாடிக்கையாளர் மனதுக்கு உகந்த பெயர் கொண்ட இன்னொரு பணியாளரை அழைத்து, "இந்தாப்பா, அவருக்கு என்ன வேணும்னு பாரு", என்கிறார்.

நீங்கள் விலகிக் கொள்கிறீர்கள். அந்த இன்னொரு பணியாளர் வழியே அந்த வாடிக்கையாளருக்குத் தேவையான சேவை கிடைக்கிறது.

இப்போது உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?

இங்கே இரண்டு விஷயங்கள் நடந்துள்ளன - ஒன்று, நீங்கள் தாங்கிக் கொண்டிருந்த பெயருக்காக உங்கள் முகத்தில் அல்லது மனதில் விழுந்த அறை. இரண்டு, அங்கே ஏதும் நடவாதது போல உங்கள் முதலாளி நடந்து கொண்ட விதம்.


விஷயம் இதுதான்:

அண்ணன் "அன்புடன் பாலா" தன் ட்வீட்டர் பக்கத்தில் இந்த ட்வீட்டை பகிர்ந்திருந்தார்.

https://twitter.com/impoojasinghh/status/1012566117720739840

பூஜா சிங் என்பவரை துபாயில் பணிபுரியும் ஒரு நபர் ஃபேஸ்புக் சாட் வழியே மூன்றாம் தர வார்த்தைப் பிரயோகங்களில் அழைக்கிறார். அழைக்கிறார் என்றால், கிட்டத்தட்ட அழைக்கிறார். அதனை பூஜா சிங் அந்த நபர் பணி புரியும் நிறுவனத்திற்கு அளிக்கும் இணையவழிப் புகார்தான் அந்த ட்வீட்.

இதன் நதிமூலத்தைப் பிடித்துப் போனீர்கள் என்றால், பத்து நாட்களுக்கு முன் பூஜா சிங் - ஏர்டெல் இடையே நிகழும் ட்வீட்டர் வழி சம்பாஷணை ஒன்று கிடைக்கிறது.

< பொறுப்புத் துறப்பு: மதிப்பிற்குரிய பூஜா சிங் அவர்களை அநாகரிக ட்ரோல் செய்வோர், இணையவழிப் பாலியற் துன்புறுத்தல்களில் ஈடுபடுவோரை நான் எவ்வகையிலும் ஆதரிக்கவில்லை . அப்படிப்பட்ட கண்டிக்கத்தக்க ஒரு விஷயம்தான் அந்த துபாய் அன்பர் செய்த செயல்  > 

சரி, விஷயத்துக்கு வருவோம்:

பூஜா தன் ஏர்டெல் இணைப்பின் பழுது குறித்த புகார் ஒன்றை ஏர்டெல்லின் ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்கிறார். 

@airtelindia pathetic Airtel DTH customer service.I raised complaint for reinstallation of DHT.but assigned service engineer miss behaved with me. His words are "Tum Phone Rakho Dobara call mt krna " his number is+91 79-85195094.   This is how Airtel is looting it's customer.

இதற்கு ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை ஊழியர் ஷோயப் ( Shohaib ) என்பவர் ஏர்டெல் சார்பாக ட்வீட்டரிலேயே பதில் தருகிறார். 

Hey, I most definitely appreciate you reaching out here! We’ll take a closer look into that & get back shortly with more information. Thank you, Shoaib

அதற்கு பூஜா தரும் மறுவார்த்தை.... 

Dear Shohaib, as you’re a Muslim and I have no faith in your working ethics because Kuran may have different version for customer service, thus requesting you to assign a Hindu representative for my request. Thanks

அதற்கான ஏர்டெல்லின் எதிர்வினை:

Hi Pooja! As discussed, please let me know what days & time frames work best for you so we can talk. Further, please share an alternate number so that I can assist you further with this. Thank you, Gaganjot

அதாகப்பட்டது, மாற்று இனத்தவர் அளிக்கும் சேவையில் தனக்கு உவப்பில்லை - ஏனெனில் அவர் பின்பற்றும் மார்க்கம் கொண்ட  வாடிக்கையாளர் சேவை குறித்த புரிதல் தனக்கு உகந்ததில்லை. எனவே நான் பின்பற்றும் மதத்தைச் சேர்ந்த ஒருவரை எனக்குச் சேவை புரிய அனுப்பி வை, நீ போகலாம் - என்கிறார் பூஜா.

ஏர்டெல் நிறுவனமும்  அங்கே ஏதும் நிகழாதது போல ககன்ஜோத் என்பவரைக் கொண்டு அதற்குப் பின்னான சேவையை பூஜாவிற்குத் தொடர்கிறது.

இது நிகழ்ந்து பத்து தினங்களுக்கு மேலாகிறது. 

ஏர்டெல் சேவை ஊழியர் ஷோயப் இன்றும் கருமசிரத்தையாக டிவிட்டரில் வரும் புகார்களுக்கு பதிலளித்தவாறுதான் இருக்கிறார்.

You must find the courage to leave the table if respect is not longer being served என்று ஒரு வாசகத்தை இருதினம் முன் வாட்ஸாப் ஸ்டேட்டஸ் ஒன்றில் வாசித்தேன்.

பணியிடங்களில் நாம் ஒவ்வொருவருமே அவ்வப்போது ஏதேனும் அவமானங்களைச் சந்தித்தவாறேதான் நம் பணி வாழ்க்கையைத் தொடர்கிறோம். அடுத்த வேளைச் சோறு, பிள்ளைகளுக்கு பள்ளிக்கட்டணம், வீட்டுக்கடன் என்று ஏதேனும் நினைவிற்கு வந்து தொலைத்து இந்த வகை அவமானங்களை எல்லாம் மென்று விழுங்கச் செய்து விடுகின்றன.

Customer is the purpose of our business என்று சொன்னவர் நம் மகாத்மா அல்லவா? ஆனால் அதற்காக அந்த வாடிக்கையாளரின் உள்ளார்ந்த  purpose என்னவாக இருந்தாலும் அதனை நிறைவேற்றி வைத்தல்தான் சிறந்த சேவை என்று புரிந்து வைத்திருக்கிறது ஏர்டெல் என்று இதனை எளிதில் விட இயலவில்லை.

இந்த மாதிரியான வாடிக்கையாளர் வேண்டுதல்கள் எதிக்ஸ் பிரகாரம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால், சட்டப்படி பூஜா கேட்டதில் ஏதும் தவறில்லை என்று ஒரு கூட்டம் கூவுகிறது.

"அது ஏர்டெல் எடுத்த முடிவு அல்ல. ஒரு வாடிக்கையாளர் சேவை அதிகாரி (ஷோயப்) வேறு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, இன்னொரு அதிகாரிக்கு அந்தப் புகார் கணினியால் மாற்றித் தரப்பட்டது", என்கிறது ஏர்டெல். 

சட்டப்படி இது தவறு இல்லை என்பதால் இங்கே நம்மால் சட்டப்படி ஏர்டெல் நிறுவனத்திற்கு எதிராக ஏதும் செய்ய முடியாது இல்லையா?

ஆனால் நம்மைப் போன்ற சில விசித்திர விலங்குகள் கடைபிடிக்கும் எதிக்ஸ் எழவின் படி இது தவறுதானே? அதற்கு என்ன செய்ய?

இனி ஏர்டெல் கடைப்பக்கம் ஒதுங்கக்கூடாது என நினைக்கிறேன்.

கையில் இருக்கும் ஏர்டெல் டேட்டா டாங்கிள் ஒன்றையும் திருப்பித் தந்து விடுவதாய் முடிவு செய்திருக்கிறேன்.

காரணம், ஷோயப் அடைந்த வலியை  நான் உணர்ந்தேன். ஏர்டெல் நிறுவனத்தின் கையாலாகாத தனத்திற்கு எதிராய் உடனடியாக அவரால்தான் ஏதும் செய்ய இயலவில்லை - நாமெனும் எதுவும் செய்வோம் என்பதுதான்.

Jai Hind!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...