Dec 26, 2009

அபேஸ் ராணியின் அசத்தல் டெக்னிக்




Courtesy: Junior Vikatan

அபேஸ் ராணியின் அசத்தல் டெக்னிக்
'மாப்பிள்ளை வர்றார்... பிளீச் பண்ணிக்கோ!'
''பத்திரிகைல நீங்க குடுத்த விளம்பரத்தைப் பாத்துட்டுத்தான் போன் பண்றேன்... கரூர்ல எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான். நல்ல குடும்பம், மாசம் முப்பதாயிரம் சம்பாதிக்கிறான். நீங்க ஓகே சொன்னா, பொண்ணு பார்க்க வர்றோம். மாப்பிள்ளை பிடிச்சிருந்தா மத்ததை நேரில் பேசிக்குவோம்...''
- திருமண வயதில் பெண் இருக்கும் வீட்டுக்கு பெண்குரலில் இப்படியரு போன் வந்தால் யாருக்குத்தான் ஆர்வம்வராது..? ஆனால், அப்படி ஆர்வத்தோடு நம்பித்தான் மோசம் போயிருக்கிறார் அஸ்ரப் அலி..!
காரைக்குடி காட்டுத்தலைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் இந்த அஸ்ரப் அலி. கைம்பெண்ணான தன் மகள் காமிலா பானுவுக்காக மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தவர், கடந்த ஆகஸ்ட் மாதம் பத்திரிகை ஒன்றில் விளம்பரம் கொடுத்தார். அதைப் பார்த்துவிட்டு, அவரைத் தொடர்புகொண்டு மேற்கண்டபடி நைச்சியமாகப் பேசி தன் மோசடிக்கு வலை விரித்தார் இந்திரா என்ற கில்லாடிப் பெண்!
இந்திராவை பெண் பார்க்க வரச்சொன்னார் அஸ்ரப். ஆகஸ்ட் 23-ம் தேதி மதியம் இந்திரா மட்டும் அஸ்ரப் வீட்டுக்கு வந்திருக் கிறார். ''மாப்பிள்ளையும்
மற்றவர்களும் எங்கே?'' என்று கேட்டதற்கு, ''அவங்களெல்லாம் பின்னால வந்துக்கிட்டு இருக்காங்க...'' என்று சொன்னார். அப்போது, தன் நகைகளை எல்லாம் அணிந்துகொண்டு சுமாரான 'மேக்-அப்'பில் இருந்தார் காமிலா பானு. அதைப் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கிய இந்திரா, ''மாப்பிள்ளை பார்க்க வர்றப்ப பொண்ணு இப்படியா இருக்கறது? முகத்துக்கு ஒரு பிளீச் பண்ணிட்டு வந்தா நல்லா பளிச்னு இருக்குமே...'' என்று சொல்ல... அஸ்ரப் வீட்டாரும், ''பக்கத்துலதான் பியூட்டி பார்லர் இருக்கே... பண்ணிட்டா போச்சு...'' என்று ஆர்வத்துடன் சொன்னார்கள்.
உடனே காமிலா பானுவையும் அஸ்ரப்பையும் கூட்டிக்கொண்டு அங்கு போன இந்திரா, காமிலா பானுவுக்கு முகத்தில் பிளீச் பண்ணி மேக்கப் போடும்படி சொல்லி இருக்கிறார். அதற்கு ஆயத்தமான பியூட்டி பார்லர் பெண்மணி, காமிலா பானு அணிந்திருந்த 35 பவுன் நகைகளையும் கழற்றி இந்திராவிடம் கொடுத்திருக்கிறார்.
பியூட்டி பார்லருக்கு வெளியில் காத்திருந்ததால், இதெல்லாம் அஸ்ரப்புக்கு தெரியவில்லை. பத்து நிமிடத்தில் பார்லரை விட்டு வெளியில் வந்த இந்திரா அவசர அவசரமாக, ''மாப்பிள்ளையும் மத்தவங்களும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டாங்களாம். நம்ம ரெண்டு பேரும் போய் கூட்டிட்டு வந்துருவோமா..?'' என்று சொல்லி அஸ்ரப்பையும் அழைத்துக்கொண்டு பஸ் ஸ்டாண் டுக்குப் போயிருக்கிறார்.
அங்கு போனதுமே, ''நான் இந்தப் பக்கம் தேடுறேன்... நீங்க அந்தப் பக்கம் பாருங்க..'' என்று இந்திரா சொல்ல... ஆளுக்கொரு திசையில் தேடப் போக... தான் போன திசையிலேயே வேகமாக ஓட்டம் பிடித்துவிட்டார் இந்திரா!
பஸ் ஸ்டாண்டில் இந்திராவை காணாமல், விஷயம் புரிந்து குடும்பமே அலறிப்புடைத்து போலீஸுக்கு ஓடியது. இந்த நூதன மோசடி பற்றிக் கேள்விப்பட்ட மாவட்ட எஸ்.பி-யான ராஜசேகரன், ''இப்படி கைவரிசை காட்டியவள் இதோடு நிறுத்த மாட்டாள். தொடர்ந்து கை அரிக்கும். அதனால், நீங்கள் நேரடியா களத்துல இறங்காமல், வெவ்வேறு ஊர் முகவரிகளிலிருந்து'மணமகன் தேவை' விளம்பரம் கொடுங்கள். அதைப் பாத்துட்டு திரும்பவும் வருவா... அப்ப ஆளை மடக்கிடலாம்!'' என்று ஐடியா கொடுத்திருக்கிறார். அதன்படியே அஸ்ரப் தரப்பிலிருந்து வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு முகவரி போட்டு பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தனர்.
அப்புறம் நடந்ததை இந்த வழக்கை விசாரித்துவரும் காரைக்குடி வடக்கு க்ரைம் இன்ஸ்பெக்டர் அருணாசலம் விவரித்தார். ''எஸ்.பி-யோட ஐடியா நல்லா ஒர்க்-அவுட் ஆச்சு. புதுக்கோட்டையிலிருந்து காமிலா பானுவின் தங்கை ஹக்கீலாவுக்கு மாப்பிள்ளை தேவைன்னு அவங்க அண்ணன் அன்சாரி குடுத்த விளம்பரத்தைப் பார்த்துட்டு, போன வாரம் இந்திரா அன்சாரிகிட்ட போனில் பேசினா. தந்திரமா பேசி அவளைத் தன் வீட்டுக்கு வரவச்ச அன்சாரி, ஆளை அமுக்கி எங்ககிட்ட ஒப்படைச்சாரு! ஆரம்பத்துல உண்மையை லேசுல ஒப்புக்கலை. லேசா அதட்டுனாலே மயக்கம் வந்த மாதிரி விழுந்தா. நிஜமாகவே அவ 'ஹார்ட் பேஷன்ட்'டாவும் இருந்ததால அவளை அவ போக்குலயே பேச விட்டு உண்மைகளை வாங்கினோம்.
இவளுக்கு சொந்த ஊரு சமயபுரம். இவளோட ஆத்தாளுக்கு சமயபுரம் கோயில்ல தேங்காய் பழத் தட்டு விக்கிறது பொழப்பு. இவளுக்கு மூணு வயசு இருக்குறப்ப, இவளோட ஆத்தா இன்னொருத்தனோட கள்ளத்தொடர்பா இருந்திருக்கா. அதைப் பாத்துடக் கூடாதுங்கறதுக்காக அடிக்கடி இவளை வீட்டை விட்டு வெளியில் துரத்தி விட்டுருக்காங்க. அது மாதிரியான நேரங்கள்ல கோயிலில் தங்கிக்கிட்டு, சின்னச் சின்னத் திருட்டுகளை செஞ்சிருக்கா. பெரியவளானதும் பெரிய பெரிய கேஸ்கள்ல சம்பந்தப்பட்டிருக்கா. இப்பதான் மாட்டியிருக்கா.
கடந்த மார்ச் மாதம் தென்காசி பாவூர்சத்திரத்துல திருமலைக்குமார் என்பவரின் மகள் கவிதாவிடம் 20 பவுன், போன மாசம் 2-ம் தேதி ராமநாதபுரம் கோவிந்தராஜின் மகள் ஷர்மிளாதேவியிடம் 10 பவுன் ஆகியவற்றையும் இதே ஸ்டைல்ல அபேஸ் பண்ணியிருக்கா. இவகிட்டருந்து 38 பவுனை ரெக்கவரி செஞ்சிருக்கோம். கோவை, சென்னைன்னு இன்னும் பல இடங்களில் இதே ரீதியில் இவ கைவரிசை காட்டியிருக்கா. விசாரிச்சுக்கிட்டிருக்கோம்...''என்றவர்,
''இப்படி அமுக்கின நகைகளை திண்டுக்கல்லிலும் திருப்பூரிலும் வித்துக் காசாக்கி இருக்கா. கட்டிக்கிட்டவன், வெச்சிக்கிட்டவன்னு இவளுக்கு பலரோட தொடர்பும் இருக்கு. முதல் புருஷன் உயிரோடு இல்லை. அவனுக்குப் பிறந்த தன் மகளை கொடைக்கானல் கான்வென்ட்ல சேர்த்துப் படிக்க வெச்சிருக்கா...'' என்று சொல்லி அசர வைத்தார்.
கடந்த 7-ம் தேதி ரிமாண்டுக்கு செல்லும் வழியில், சில நிமிடங்கள் இந்திராவிடம் பேச முடிந்தது. ''காரு... பங்களான்னு வசதியா வாழ நெனச்சுத்தான் இந்தத் தொழில்ல இறங்குனேன். இதுல கொஞ்சம் காசைத் தேத்திக்கிட்டு, திருப்பூர்ல போலி டாக்கு மென்ட்டுகளை தயார் செஞ்சு, சொத்துகளை விக்கிற ஆளுங்களோட சேர்ந்துகிட்டு பிசினஸ்(!) பண்ணி வசதியாகிடலாம்னு கணக்குப் போட்டேன். அதுக் குள்ள மாட்டிக்கிட்டேன்...'' என்றபடியே கோர்ட் படிகளில் ஏறினார்.
இந்த மாதிரி ஐடியாவுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிச்சா பத்தாது... முழுசா ஒரு லாட்ஜே போட்டு யோசிக்கணும் போல!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...