Dec 20, 2010

நலம் தரும் திங்கள் - தொப்புள்கொடி உறவு!


ஸ்டெம் செல் குறித்து சில தகவல்கள்

கடந்த ஏப்ரலில் ஷைலஜாவின் பிரசவ நேரத்தில் மருத்துவமனையின் காரிடார்களில் நகங்கடித்தபடி இங்குமங்கும் நான் உலாத்திக் கொண்டிருந்தேன். லேபர் அறைக்குள் ஷைலஜா சென்று ஐந்து நிமிடங்கள்தான் ஆகியிருந்தன.

"எக்ஸ்க்யூஸ்மி சார், மிஸ்டர் கிரி?", விற்பனைப்பெண்  தோற்றத்தில் ஒரு யுவதி. 

"நான் ஜீவன் ப்ளட் பேங்க்'ல இருந்து வர்றேன். ஸ்டெம்செல் சேமிப்பு வங்கி  மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்"

"சொல்லுங்க"

"இப்போ உங்க மனைவியின் பிரசவத்திற்கு பின்னால் நீங்க தூக்கி எறியப்போகும் நஞ்சுக்கொடியில் இருந்து ரத்த சாம்பிள் சேகரிக்க உங்க அனுமதி வேணும்"

இதுபற்றி மோகன் முன்னமே சொல்லியிருந்தான்.

"இதுக்கு ஏதேனும்...."

"இல்லை நீங்க இதுக்கு ஏதும் கட்டணம் தர அவசியம் இல்லை. நாங்க சேகரிப்பது எங்கள் ஆராய்ச்சிக்கு மற்றும் எங்களுக்காக சேமித்து வைக்க. உங்களுக்காக நாங்கள் இதை பாதுகாக்க பராமரிக்க வேணும்'னு நீங்க விரும்பினால் அதற்கு தனி கட்டணங்கள் உண்டு. அதுக்கு இப்போ அவசரம் இல்லை. எங்க எக்சிக்யூடிவ் ரெண்டு நாட்களுக்கு பிறகு உங்களை வந்து பார்ப்பார். அவர்கிட்ட நீங்க பேசிக்கோங்க. இப்போ உங்க அனுமதி மட்டும் வேணும்", என அந்தப் பெண் ஏதோ பேப்பரில் கையொப்பம் வாங்க கொண்டார். 

பிரசவ நேரத்தில் குழந்தை பிறந்ததும் குழந்தையை அன்னையிடம் இருந்து பிரிக்க அதன் தொப்புள் கொடி இரு முனைகளிலும் பாதுகாப்பான முறையில் கத்தரிக்கப்படுகிறது. அன்னையின் கருப்பைப் பகுதி மற்றும் குழந்தையின் தொப்புள் பகுதி என இரு முனைகளிலும் உணவு பகிர்விற்காக இணைப்புக் குழாயாக செயல்பட்ட அந்தக் குழாய்கள் இப்போது இரு முனைகளிலும் பாதுகாப்பாக சீலிடப்படுகிறது (முன்பெல்லாம்  முடி போடுவார்கள்). இடையில் இருக்கும் பகுதி எதற்கும் உபயோகம் இல்லாமல் குப்பைக் கூடைக்குச் செல்கிறது. அந்தப் பகுதியில் இருந்துதான் ரத்தம் சேகரிக்கப்படுவதாக அந்தப் பெண்மணி சொன்னார். 

அந்த ரத்தத்தை சேமித்து வைத்து மருத்துவத் துறையில் பயன்படுத்துகிறார்கள்.

அப்படி என்ன பயன்கள்? அது என்ன ஸ்டெம்செல்? 

பத்தே வார்த்தைகளில் இதன் பயனைச் சொல்லவேண்டுமென்றால் "எதிர்காலத்தில் உங்கள் குடும்பத்தினருக்கு சில சிக்கலான நோய் சிகிச்சைகளுக்கு இந்த ஸ்டெம்செல்  உதவலாம்"

இப்போது விரிவாய் இதுபற்றிப் பார்ப்போம்! வாருங்கள் சில அடிப்படைக் கேள்விகளில் இருந்து செல்வோம்.

ஸ்டெம் செல் என்றால்?

உடலின் எந்த ஒரு அணு /செல்லுக்கு, தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு, உடலின் 210 வித்தியாசமான அனுக்களாகவும் தேவையான தருணத்தில், தன்னை உருமாற்றிக்கொள்ளும் திறனும் இருக்கிறதோ அந்த செல்லையே ஸ்டெம் செல் என்கிறது உயிரியல்/அறிவியல்.
இது தமிழில் குறுத்தணுக்கள் அல்லது பலுக்கல் என்னும் கலைச்சொல்லால் அழைக்கப்படுகிறது! (தாவரங்களில் குருத்துக்களிலும், மனிதர்களின் வளரும் தன்மையுள்ள சில உடல் பாகங்களிலும் இருப்பவையாதலால் இப்பெயர்!)
நன்றி: மேலிருப்பான் <http://padmahari.wordpress.com>
தொப்புள் கொடியிலிருந்து எவ்வளவு ரத்தம் கிடைக்கும்?

ஏறத்தாழ ஐந்து டீ ஸ்பூன். கொஞ்சம் கூட வலிக்காது. சில நிமிடங்களில் எடுத்து விடுவார்கள்.

தொப்புள் கொடி ரத்தத்தின் சிறப்பு என்ன?

அது பிராண வாயுவை உடலுக்குக் கொண்டு செல்லும் சிவப்பு உயிரணுக்கள் மற்றும் நோயை எதிர்க்கக்கூடிய வெண் உயிரணுக்கள் என இரு வகை உயிரணுக்களையும் உற்பத்தி செய்யவல்லது. அதில் ஸ்டெம் செல் ( முதல்நிலை உயிரணு) இருக்கிறது. இதிலிருந்துதான் ப்ளட் செல்கள் (ரத்த உயிரணுக்கள்) உற்பத்தியாகின்றன.

தொப்புள் கொடி ரத்தத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம்?

எதிர்காலத்தில் நீரிழிவு, முடக்கு வாதம் (ரூமாடோய்ட் ஆர்த்ரிடிஸ்) போன்ற நோய்களை குணப்படுத்த உதவும். அது மட்டுமல்ல, எதிர்காலத்தில் இந்த ரத்தத்தில் உள்ள முதல்நிலை உயிரணுக்களைக் கொண்டு கல்லீரல், சிறுநீரகம், அவ்வளவு ஏன் இதயத்தையே உற்பத்தி செய்ய முடியும் என்று நம்புகிறார்கள். இப்போதே பற்களை வளர்த்து விட்டார்கள்.

இப்போது எதற்குப் பயன்படுகிறது?

இரத்தப்புற்றுநோய் (லுகீமியா) வந்தவர்களது எலும்பு மஜ்ஜையை (போன் மேரோ) வேதிச் சிகிச்சை (கீமோதெரபி) மூலம் அழித்து விட்டு இரவல் வாங்கிய முதல்நிலை உயிரணுக்களை அங்கு இட்டு நிரப்புகிறார்கள். இது இரவல் கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக தொப்புள் கொடி ரத்தத்தைப் பயன்படுத்தலாம்.

என் மகனின் தொப்புள் கொடி ரத்தம் எதிர்காலத்தில் அவன் உயிரைக் காப்பாற்றுமா?

அது தேவைப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே. அப்படித் தேவைப்பட்டாலும் அது பயன்படுத்தப்படுவது உறுதியில்ல- எனக்குப் புற்று நோய் வரக் காரணமாக இருந்த முதல்நிலை உயிரணுக்கள் என் தொப்புள் கொடி ரத்தத்திலும் இருக்கலாமில்லையா? ஆனால் என் தொப்புள் கொடி ரத்தம் என் உடன் பிறந்தவர்கள், சுற்றம் மற்றும் நட்பு வட்டத்துக்குக் கை கொடுக்கலாம்.

ஸ்டெம்செல் என்னும் சொல் மருத்துவத்துறையில் ஆச்சர்யங்களையும், நம்பிக்கைகளையும், வரவேற்பினையும் மட்டுமே பெற்ற ஒரு சொல் அல்ல, சமீப காலமாக பல கருத்து மோதல்களையும் சர்ச்சைகளையும் கூட உள்ளடக்கிய சொல் இது.

இது பற்றி அறிவியற்பூர்வ தகவல்களைத் தர நான் ஒரு மருத்துவனல்ல. எனினும் என் அனுபவத்தில் அறிந்ததைச் சொன்னேன்  சற்றே பின்னணித் தகவல்களை இணைத்து.


தொடர்புடைய சுட்டிகள்-

அமெரிக்காவில் முதல்நிலை உயிரணு ஆய்வு (ஸ்டெம் செல் ரிசர்ச்)- http://www.physiciansforlife.org/content/view/215/38/
.
.
.

1 comment:

natbas said...

பயனுள்ள சுட்டிகளுக்கு மிக்க நன்றி.

நததி- சுவையான பகுதி. தொடர்ந்து செய்யுங்கள்.

நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...