Dec 26, 2010

மன்மதன் அம்பு - என் பார்வையும் சில எரிச்சல்களும்...



முதலில் கொஞ்சம் என் எரிச்சல்கள் பற்றி...


அப்படியொன்றும் அசாதாரண படம் இல்லை மன் மதன் அம்பு! கமல் படங்களுக்கே உரிய எல்லா பிளஸ் மைனஸ்'களுடன்தான் வந்திருக்கிறது படம்.

ஆனால் ஏதோ விஜய் படத்தையோ அல்லது விஜய.டி.ராஜேந்தரின் படத்தையோ பார்த்த கோலத்தில் இணையத்தில் வரும் விமரிசனங்களும் கீச்சொலிகளும் எனக்கு சிரிப்பு கலந்த எரிச்சலையே வரவழைக்கின்றன.

இந்தப் படத்தை எதற்கு கப்பலிலும் ஐரோப்பாவிலும் எடுக்க வேண்டும் வெறும் மேடை நாடகக் கதை இது, காமராஜர் அரங்கம் போதாதா என கமலுக்கு அறிவுரை சொல்கிறார் ஒருவர்.

உதயநிதி செலவில் கப்பல் ட்ரிப் அடிச்சிட்டாரு கமல் என்கிறார் இன்னொரு நண்பர்..

உங்கள் எல்லோரையும் விட சினிமா பற்றி நன்கு தெரிந்தவர் கமல்ஹாசன் என்பதால் மட்டும் நான் இதைச் சொல்லவில்லை.... மறுபடி மறுபடி எழுத்தாளர் பா.ரா. அவர்களின் கோட்டையே அணிந்து கொண்டு பேசுகிறேன்...

நமக்குச் சரியென்று பட்டால் ஏற்பதும், தவறென்று தோன்றினால் ஏற்காமல் விடுவதும் நம் சுதந்தரம் சார்ந்தது. மாற்றுக்கருத்தை முன்வைக்கும்போது குறைந்தபட்ச நாகரிகம் கடைப்பிடிக்க வேண்டுமென்பது ஆதார விதி.

அதே போல விமர்சனம் என்று எழுத வரும்போது அதை விமரிசனமாக எழுத வாருங்கள் என்பதுவும் தயவு செய்து பச்சை மிளகாயைக் கடித்துவிட்டு அடியில் பற்றி எரியும் நிலையில் ஏதும் எழுத வாராதீர்கள் என்பதுவும்தான் என் வேண்டுகோள்.

எந்திரன் திரைப்படம் வரும் முன்னரே ஒரு எழுத்தாளர் எழுதியது நினைவிற்கு வருகிறது. "படத்தின் பாடல்கள் குப்பை. அதைத்தான் இப்போதைக்கு சொல்ல இயலும். படம் வரட்டும், பார்த்துவிட்டு கிழி கிழியென்று கிழிக்கிறேன்", என படம் பார்க்கு முன்னரே எழுதியவர் அவர். இது போன்றோர் வழியில் வந்த நாம் இப்படி எதையேனும் திட்டித் திட்டியே "திட்டல் பேர்வழியாக" ஒரு நாள் உருவெடுத்துவிடப் போகிறோம் என்பதே என் வேதனை.

சரி! இப்போது படம் குறித்து...

நடிகைக் காதலி த்ரிஷா, தொழிலதிபர்க் காதலன் மாதவன், இருவரிடையே காதல், ஊடல், பிரிவு என ஆரம்பம். சில வருட இடைவெளியில் த்ரிஷா  தன் தோழி சங்கீதாவுடன் ஐரோப்பிய ஹாலிடே டூர் போக அவரைப் பின் தொடர டிடெக்டிவ் கமலை அனுப்புகிறார் மாதவன். இதனைத் தொடர்ந்து வரும் சம்பவங்கள், குழப்பங்கள், கலகலப்புகள், சலசலப்புகள், ஜோடி மாற்றங்கள் என இவற்றின் கோர்வைதான் மன் மதன் அம்பு.

படத்தின் பிளஸ்'கள் பற்றி - 

கனமான அழுத்தம் திருத்தமான டயலாகுகள். குறிப்பாக மாதவன், த்ரிஷா இடையே பிரிவைக் கொண்டுவரும் அந்த கொடைக்கானல் சாலையோர வசனங்கள்.  மேலும் "நேர்மையானவங்களுக்கு திமிர்தான் வேலி" என்பது போன்ற கமல்த்தனமான வசனங்கள் (தியேட்டரில் கைதட்டல்).

அதன் பின்னர் மாதவன் - த்ரிஷா இடையே மீண்டும் பிளவு ஏற்படுத்தும் ஒரு தொலைபேசி உரையாடல், அந்த உரையாடலில் மாதவன் வெளிப்படுத்தும் அற்புத வசன வெளிப்பாடுகள். 

அந்த பப் (pub) காட்சி வசனங்கள். அந்தக் காட்சியின் வசன நகைச்சுவைகளை நாம் கிரகித்துக் கொள்ள நமக்கு நாளாகும்.

சங்கீதாவின் கதாபாத்திரம். ஒரு டைவர்சியின் அசால்ட்'டான டயலாக் டெலிவரிகளை சங்கீதா வெளிப்படுத்தும் ஒவ்வொரு காட்சியும் "நோட் பண்ணுங்கடா, நோட் பண்ணுங்கடா" என்கின்றன.

சங்கீதாவின் பையனாக வரும் அந்தப் பொடியன். "பையன் கெடச்சிட்டான், ஆனா புருஷனைத் தொலச்சுட்டியே", என அவன் சங்கீதாவிடம் சொல்லும்போது தியேட்டரே அலறுகிறது.

இயக்குனர் பிரியதர்ஷனின் குரூப்பு (Kuroop) பாத்திரம். மனுஷர் அசரடிக்கிறார்.

"நீலவானம் பாடல்" - இப்படி தலைகீழாக அந்தப் பாடலின் படமாக்கத்திற்கு யோசித்தது மட்டுமல்ல, தலைகீழ்ப் பாடலில் நேரான உதட்டசைப்புக்குப் பின் இருக்கும் பிரமாத உழைப்பு பிரமிக்க வைக்கிறது. இந்தப் பாடலின் படமாக்கம் குறித்து ஸ்ரீதர் நாராயணன் என்ன சொல்கிறார் பாருங்கள்:
சாதாரண ஷாட்டுகளுக்கு விநாடிக்கு 24 ஃப்ரேம்கள் செட் செய்தால் ஸ்லோமோஷனுக்கு 60 ஃப்ரேம்கள் செட் செய்து கொள்வார்கள். நாகராவில் பாட்டை வேகமாக ஓட வைத்து நடிகர்களை நடிக்கவைத்து பட்மெடுத்து விடுவார்கள். இதை ஸ்லோமோஷனில் ஓட்டும்போது பாடலின் சாதாரண வேகத்துக்கேற்ப உதடசைவுகள் பொருந்தும்… ஆனால் உடல் / அங்க அசைவுகள் மெதுவாக நிகழும்.
நீலவானம் பாடலில் கிட்டத்த்ட்ட அந்த முறை என்றாலும் இதில் காட்சிகளை நாம் காண்பது ரிவர்ஸ் ஸ்லோமோஷனில். அப்பொழுது பாடல் வரிகள் உதட்டசைவிற்கு பொருந்த வேண்டுமென்றால் எப்படி படம்பிடித்திருப்பார்கள் என்பதுதான் கேள்வி.
நடிக்கும்போதே பின்புறமாக நடிப்பது சாத்தியமில்லை. ஏனென்றால் ஏகபட்ட நடிகர்கள் ஷாட்டில் தெரிகிறார்கள். பாடலை ரிவர்ஸில் ஓடவிட்டு உதட்டசைப்பது முடியாத காரியம் என்று நினைக்கிறேன். அதுதான் அந்த விஷயத்தில் பிரமிப்பானது.
(நன்றி: தமிழ் பேப்பர்)


மனுஷ நந்தன் - ஒளிப்பதிவில் இத்தனை அற்புதத்தை தன் ஆரம்பப் படங்களிலேயே காட்ட இயலும் இவரின் ஒளிமய எதிர்காலம் படத்தில் ஒவ்வொரு பிரேமிலும் பிரதிபலிக்கிறது. வாழ்த்துக்கள் சார்! கப்பல் சார்ந்த காட்சிகள் கலக்குகின்றன. 

ரமேஷ் அர்விந்த் - ஒரு அரதப் பழசு கதாபாத்திரம் என்றாலும் அதிலும் நேச்சுரலாக கலக்கியிருக்கும் ர.அ. அசர வைக்கிறார்.

ஒரே காட்சியில் வந்தாலும் நறுக்குத் தெறிக்கும் அந்த இலங்கைத் தமிழ்ப் பெண்.

கொடைக்கானலில் பறவைகள் பறப்பதை முதலில் கிராபிக்சில் காட்டினாலும் அதன் பின்னணியில் இருக்கும் விஷயத்தை பின்னால் மற்றொரு கோணத்தில் காட்டி கமல், த்ரிஷா என இருவர் மன ஓட்டத்தையும் யோசிக்க வைக்கும் எக்ஸலன்சி!

படத்தின் மைனஸ்கள்:

கமல் நடிப்பு, வெளிப்பாடுகள் குறித்து நாம் தனியே சர்டிபிகேட் தரும் அவசியம் இல்லை. எனினும், நாக்கை துருத்திக் கொண்டு அவர் அழாமல் அழும் பழைய ரகக் காட்சிகள், 

பொண்டாட்டி செத்துட்டா என அவர் சொல்வதுவும், எப்படி செத்தாங்க என த்ரிஷா கேட்பதுவும் "வே.வி" படத்தை நினைவு'படுத்துகின்றன'.

காதலைக் கலைக்கும் வில்லி அம்மாவாக உஷா உதுப் (அவர் நடிப்பு ஓகே என்றாலும்), தேவையில்லாத அந்த அத்தை பொண்ணு கேரக்டர்.

ஊர்வசி - நடிப்பில் ராட்சசி என செல்லமாக கமலால் அழைக்கப் பட்ட ஊர்வசியின் கே.ஆர்.விஜயாத்தனமான நடிப்பு. கடைசி வரை ஆஸ்பத்திரியில் அழுது வடியும் இவர் கடைசியில் சுபம் எனும்போது அதே ஆஸ்பத்திரி பின்னணியில் முழு மேக்-அப்பில் சிரித்து வடிவது... 

கிளைமாக்ஸ் சொதப்பல்கள். என்னடா நடக்குது இங்க என சொல்ல வைக்கிறது.

கடைசியாக....

படமாக்கப்பட்ட விஷயத்திலும், வழக்கமான கமலின் பிளஸ்'சான கதாபாத்திர சிறப்புகளிலும் அசாதாரண நேர்த்திகளைக் கொண்டிருக்கிறது படம். கொஞ்சம் பழைய க்ளிஷேக்களையும் கமல் தவிர்த்திருக்க வேண்டிய சற்றே மிகைப் படுத்தப் பட்ட மேதாவித்தன காட்சிகளையும் தவிர்த்திருந்தால் படம் ஏ-ஒன் என சொல்லியிருக்கலாம்.

இருந்தாலும் என்ன....படம் ஏ-டூ என சொல்லி முடித்துக் கொள்கிறேன்.
.
.
.

2 comments:

natbas said...

தையிரியமா உங்க நடுநிலையான கருத்தைத் தெரிவித்துள்ளீர்கள். பாராட்டுகள்.

Shanmuganathan said...

சார், நான் கூட இந்த படத்தை எங்க ஊர்ல பார்த்துட்டேன் சார்..... இந்த ஊர்ல உள்ள ஒலிப்பெருக்கியின் மூலமே உங்களக்கு கேட்கவில்லை என்றால் நாங்கள் எவ்வளவு கஷ்டபடிருப்போம்.... சரி கப்பலாவது சரியா காமிகிரங்கான அதுவும் இல்லை, எனக்கு ஒரு டவுட்.... அவரா பிரியதர்ஷன்.? இல்லைன்னு நினைக்கிறேன்.. கே.எஸ். ரவிகுமார் கூட்டணியில் ஒரு தரமில்லாத படம். ஓகே t .v ல பார்க்கும்போதவது புரியிதானு பார்ப்போம்.

நன்றி,.
சண்முகநாதன்

Related Posts Plugin for WordPress, Blogger...