Dec 24, 2010

வெள்ளிக் கதம்பம்


டிசம்பர் சங்கீத சீசனை முன்னிட்டு...

சங்கீத சீசனுக்கு ஓரிரு கச்சேரிகளுக்கு ரெவியு எழுத நினைத்தேன். இன்னும் நினைத்துக் கொண்டே இருக்கிறேன். சரி இருக்கட்டும், சீசனுக்குத் தகுந்தாற்போல் ஒரு பழைய ஜோக்கை சொல்கிறேன்.

பாகவதரின் சிஷ்யகோடி: நம்ம பாகவதர் பாடினார்ன்னா அது பாட்டு. மனுஷர் ஒரு சமயம் புன்னாகவராளி ராகம் பாடினார், மேடையை சுத்தி சர்ப்பங்கள் சாரிசாரியா படமெடுத்து ஆடத் தொடங்கிடுத்து...

கேட்பவர்: ஓ சபாஷ்? 

சிஷ்யகோடி: இன்னொரு சமயம் அமிர்தவர்ஷினி  பாடினார். மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டிடுத்து.

கேட்பவர்: ஓ பலே! அப்போ போன வார கச்சேரில பாகவதரைப் பார்த்து கல்வீச்சு மழை சாரி சாரியா நடந்ததே  அப்போ என்ன ராகம் பாடினார் உம்ம பாகவதர்?

சிஷ்யகோடி: %*&*(&))*)(*)*)(*%


ஆண்ட்ராய்ட் போன்களில் தமிழ்:

புதிய ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளில் உள்ள முக்கியப் பிரச்னை அவற்றின் பிரவுசர்கள் யுனிகோட் எழுத்துருக்களை ஆதரிப்பதில்லை. எனவே தமிழ் எழுத்துக்கள் வெறும் கட்டம் கட்டமாகத் தெரிகின்றன.

இந்தப் பிரச்னைக்கு உதவிக்கு வருகிறது ஓபெரா மினி பிரவுசர். 

முதலில்: ஓபெரா மினி உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

பின்னர் கீழ்கண்டவற்றை செய்து உங்கள் செட்டிங்'குகளை மாற்றுங்கள்.

1)  ஓபெரா மினி அட்ரஸ் பாரில் config: என டைப் செய்து "GO" பட்டனை ஹிட் செய்யுங்கள்.

2) கீழே ஸ்க்ரோல் டவுன் செய்து 'Use bitmap fonts for complex scripts' என்பதை தேடிப்பிடித்து "Yes" செலக்ட் செய்யுங்கள்.

3) Save செய்யுங்கள்.

மெல்லத்தமிழ் இனி உங்கள் ஆண்ட்ராய்ட் தொலைபேசியில் வாழும்.

ரசித்த கவிதை:


நிச்சலன சிதிலம்


நிச்சலன சிதிலத்தில் நகர்கிறேன்
பேரண்டம் பிளக்கும் ஞாபக வேர்கள்
எஃகின் எதிர்த்தண்மைக்குள் உருண்ட
நீயும் நானும் நாமென நின்ற நிலை
காற்றில் உராயும் ஒய்யாரமும் நீயென
ஊடாடும் கோட்டோவியம்
இதயநரம்புகள் இறுகிப் பிடிக்க
நொறுங்கி அகலும் பாறைத்துகள்
இயங்கும் தேகசுக நீட்சியாய்
நாளை வரும் மொட்டு
பூவின் பொக்கையிலோ
அதரத்தின் ஓரத்திலோ
சுட்டுப்போகும் ஈரம்.

 (இக்கவிதையின் மற்றொரு பரிமாணத்தை வாசிக்க ==> தமிழ் பேப்பர்)


எவன்டி உன்ன பெத்தான்:
இப்படி ஒரு பாடல் இயக்குனர் கௌதம் மேனன் தயாரிப்பில் சிம்பு நடிக்க உருவாகிக் கொண்டிருக்கும் "வானம்" திரைப்படத்தில். அந்தப் பாடலைக் கேட்டு ரசிக்க காதுகள் ஆயிரம் வேண்டும். யப்பா யப்பா யப்பா... யுவன் ஷங்கர் ராஜா சார்.... அப்புறம் அந்தப் பாட்டை எழுதின ஏதோ ஒரு சார்.... பெறகு அதைப் பாடித் தொலைத்த சிம்பு சார்.... உங்களுக்கெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகம் காலத்துக்கும் கடமைப் பட்டிருக்கு.

"ஊரு விட்டு ஊரு வந்து" போன்ற டப்பாங்குத்து ரகப் பாடல்களிலும் கூட "ஷண்முகப்ரியா" என்னும் அற்புத ராகத்தைக் கலந்து அற்புதங்கள் தந்த அந்தப் பண்ணையபுரத்துப் பட்டிக்காட்டானின் மகனா இது போன்ற ஒரு பாடலுக்கு இசை அமைத்தான் என நினைத்தால் "நிஜமாவே வலிக்குது" சார்!

அந்தப் பாடல் உருவான விதத்தை இங்கே சாம்பிளில் பாருங்கள். இசை ஞானம், சுருதி ஞானம் கொஞ்சமேனும் உள்ளவர்கள் மனதைத் திடப் படுத்திக் கொண்டு இந்தப் படுத்தல்களைக் கேட்கவும்.

மடிப்பாக்கம் சபரி சாலை:


மடிப்பாக்க மாடுகளும், குப்பைகளும், குண்டும் குழியுமான தெருக்களும் பெரும்பாலும் எல்லோரும் அறிந்த விஷயம். கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு விஷயத்தில் ஜனநாயக நாடு என நம்மை நாமே மார்தட்டிக் கொள்ள இவையெல்லாம் அடிப்படை உதாரணங்கள். எனினும் சில முக்கியச் சாலைகளும் கூட பிரயாணம் செய்யத்தகா வண்ணம் இருக்கையில் அடக்கமாட்டாமல் கோபம் வருகிறது.

சபரி சாலை என்னும் இந்தப் புகழ் பெற்ற சாலை மடிப்பாக்கம் வாழ் மக்களை கீழ்கட்டளை, நங்கநல்லூர், மவுன்ட், வேளச்சேரி, சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர்  என அனைத்து புறங்களிலும் இணைத்து வைக்கிறது. 

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சாலை தொடர் மழைகளில் சிதிலமடைந்து போக்குவரத்து இல்லாத சமயங்களில் கூட அந்த இரண்டு கிலோ மீட்டரைக் கடக்க பத்து நிமிடங்கள் வரை செலவு பிடிக்க வைக்கிறது. போக்குவரத்து நெரிசல் நேரங்களில் சொல்லவே வேண்டாம்.

சாலைகள் அமைக்கும்போதே சரிவர அமைக்காத காண்ட்ராக்டர்களுக்கு கடுமையான தண்டனைகள் அமல்படுத்தினாலே ஒழிய இது போன்ற பிரச்னைகள் தீராது. ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் சட்டம் அமைப்பவர்களும், காண்ட்ராக்ட் எடுப்பவர்களும் ஒரே குடும்பத்தில் இருந்து வருபவர்கள் என்பதே.

வாழ்க ஜனநாயகம்!
3 comments:

natbas said...

தமிழ் பேப்பர் கவிதைகளை ராசிக்கார உங்க துணிச்சல் என்னை அதிர வைக்குது!

"ஸஸரிரி" கிரி said...

அந்தக் கவிதையை விட அதைத் தொடர்ந்து வர கிவிதை எனக்கு எப்பவுமே ஜுரம் வர வைக்குது. ஒரு மாறுதலுக்கு நான் கிவிதையை இங்கே கவிதைன்னு தந்துட்டு கவிதை படிக்க அங்க போவணும்னு கை காட்டிடறேன்.

இளங்கோ said...

Nice one :)

Related Posts Plugin for WordPress, Blogger...