Jan 5, 2011

நாஞ்சில் விழாவிலிருந்து...

நாஞ்சில் நாடன் அவர்களுக்கு "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்ததைக் கொண்டாடும் விதமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்த விழா சென்ற ஞாயிறன்று சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் இனிதே நடந்தேறியது.



நான் வாழ்வில் கலந்து கொண்ட முதன்முதல் தமிழ் இலக்கியம் சார்ந்த விழா இதுதான். "ஊட்டி சந்திப்பு" பதிவை நம் தளத்தில் எழுதிய சண்முகமும் நானும் சென்றிருந்தோம்.

உள்ளே நுழையும்போதே விழாவின் மூத்த அமைப்பாளரும் நான் இணையத்தில் மட்டுமே சந்தித்திருந்தவருமான அரங்கசாமி அவர்கள் வாரியணைத்து வரவேற்றார். "வாங்க, ஸஸரிரி கிரி", அடடே என்ன அங்கீகாரமடா என்றிருந்தது.


நாஞ்சில் விழா பற்றி நான் சொல்ல ஏதும் இல்லாமல் சக பதிவர்கள் விரிவாக ஏற்கெனவே எழுதி விட்டார்கள். "கிழக்கு" பத்ரி அவர்கள் ஒரு படி மேலே போய் மொத்த விழாவின் காணொளி ஏற்றத்தை பகிர்ந்துவிட்டார். எல்லாம் எக்ஸ்பிரஸ் வேகம். உங்களுக்கு ஒரு பெரிய "" சார்!


எனினும் நான் சிலாகித்த சில விஷயங்களை சின்னஞ்சிறு சொற்களில் கோர்க்க வேண்டுமென்றால்.... 

தெளிவான ஒரு துவக்கத்தைத் தந்த ராஜகோபாலனின் அட்டகாசப் பேச்சு ஒரு அட்டகாச ஆரம்பம்.நாஞ்சில் குறித்து எஸ்.ரா பேசியது நச்! பாலுமகேந்திரா பகிர்ந்த தகவல்களும், தான் ஏன் தன் "கதை நேர"த்திற்கு நாஞ்சில் கதைகளைத் தேர்தெடுக்கவில்லை என அவர் சொன்னதுவும் விழாவின் மூன்றாவது ஹைலைட். ராஜேந்திரன் அவர்கள் நெகிழ்ந்தது மற்றும் அவர் பேசிய தென் ஆற்காடுத் தமிழ்ப் பேச்சு இரண்டாம் ஹைலைட். விழாவின் முக்கிய ஹைலைட் பேச்சான கண்மணி குணசேகரன் அவர்கள் பற்றி சொல்லாமல் இந்த விழா குறித்து எழுதுதல் ஆகாது. பேச்சல்ல அது....முழக்கம் என்றே சொல்ல வேண்டும். 

ஞானி பேசியதைவிட நான் ரசித்தது அவர் கண்மணி குணா அவர்கள் பேசுகையில் கவனித்த விதம். ஆழ்ந்து ஊன்றி மூழ்கி அந்தப் பேச்சை கவனித்த அவர் பேசி முடித்து கண்மணி குணசேகரன் அவர்கள் திரும்பி நாற்காலியில் அமர்ந்தபோது அவரை உச்சிமோந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தத் தவறவில்லை.



அடுத்த கேணியில் அவசியம் கண்மணி குணசேகரன் அவர்களை காணலாமா?

ஜெமோ அவர்களை நான் நேரில் பார்ப்பது இதுவே முதன்முறை. விஷ்ணுபுர இலக்கிய வட்ட நிகழ்வாக இருப்பினும் அவரும் தன்னை முன்னிலைப் படுத்தாமல் இது நாஞ்சில் விழா என்பதைப் பறைசாற்றும் வண்ணம் பேசிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

மிகவும் விரிவான ஆவேசமான உரை நாஞ்சில் அவர்களின் ஏற்புரை. இங்கே வார்த்தைகளில் எல்லாம் நான் எழுதி அந்த உணர்வை மொழி பெயர்க்கலாகாது. தயவு செய்து பத்ரி அவர்களின் ஆடியோ பதிவைக் கேளுங்கள். "ஆமாடா, தாயளி நானும் எழுதறேன்", என்று அவர் சொன்ன போது.... சொன்னபோது என்ன....இதோ இப்போது இதை எழுதும்போதும் கூட என் கண்களை  மறைக்கிறது நீர்!



இவையெல்லாம் இருக்கட்டும். பிறர் பதிவு செய்யாத, கவனிக்கத்தக்க முக்கிய விஷயம் ஒன்றுண்டு..... அது...

இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இவ்விழாவிற்கு ஒரு பார்வையாளராக ....ஆம் பார்வையாளராக மட்டுமே வந்திருந்தார். விழா தொடங்கி சிறிது நேரம் கழித்து உள்ளே நுழைந்த அவர் பின் வரிசையில் சிறிது நேரம் மக்களோடு மக்களாக நின்று கொண்டிருந்தார். யெஸ், வெறும் பார்வையாளராக மட்டுமே. அவருடைய உள் நுழைதல் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி நடந்தது மட்டும் இங்கே விஷயமல்ல.

வழக்கமான விழா ஒன்றாக இருந்திருந்தால் ஒரு பிரபலம் உள்ளே நுழைந்து முன் வரிசையில் அமரும்போது "அண்ணன் அறிவுடை நம்பி அவர்கள் இப்போது நம் விழாவிற்கு வருகை தந்திருக்கிறார்! அவருக்கு நம் வணக்கங்களும் வரவேற்புகளும்", என ஒரு அறிவிப்பு வரும். அவரும் எழுந்து நின்று சபையை ஒரு வணங்கு வணங்குவார். 



விழா தொகுப்பாளர் ஒவ்வொரு முறை மைக் அருகே வருகையிலும், "மணி அவர்கள் வந்திருக்கிறார்", என்னும் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்த நான் ஏமாந்துதான் போனேன். அந்த இலக்கிய விழாவின் நிகழ்வுகள், வந்திருந்த வாசகர்களின் கவனம்  எந்த விதத்திலும் திசை திரும்பிச் சென்றுவிடாத வண்ணம் காத்த அமைப்பாளர்களும், அடக்கமாகத் தன்னை ஒரு பார்வையாளனாக மட்டுமே அடையாளம் காட்டிக் கொண்ட மணி அவர்களும் பெரும் பாராட்டிற்கு உரியவர்கள்.


விழா குறித்த பதிவுகள், புகைப்படங்களுக்கு ஜெமோ தந்த இணைப்புகள் கீழே!


நாஞ்சில்நாடனுக்கு விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்திய பாராட்டுவிழா குறித்து நண்பர்கள் எழுதிய பதிவுகள்,புகைப்படங்கள் , வீடியோ
சுரேஷ்கண்ணன்
வேழவனம்
பத்ரியின் வீடியோ பதிவு
புகைப்படங்களின் முழுத்தொகுப்பு
தேனம்மை லெக்ஷ்மணன்


5 comments:

natbas said...

மிக்க சுருக்கமாக எழுதி விட்டீர்களே...

இன்னும் விரிவாக எழுதி இருந்தால் அங்கே என்ன பேசினார்கள் என்பதை நாங்களும் தெரிந்து கொள்வோமல்லவா?

சுருக்கமாக இருந்தாலும் சுவையான பதிவு, நன்றி.

R. Gopi said...

பகிர்விற்கு நன்றி கிரி

Philosophy Prabhakaran said...

விழாவிற்கு நேரில் சென்றுவந்த உணர்வு கிடைத்தது.. நன்றி...

Shanmuganathan said...

கிரி சார்,
பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி, நானும் கொஞ்சம் நீண்ட கட்டுரையை எதிர்பார்த்தேன்...... மிகவும் உணர்சிகரமான தருணமாக இருந்தது. கண்மணி குணசேகரனி கண்டிப்பாக எதிர்பார்க்கலாம் அடுத்த கேணி கூட்டத்தில். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பாளர்களுக்கு எனது நன்றிகள் கோடி.
மணி சார் அளவுக்கு ஒரு எளிமையை பார்ப்பது மிகவும் கடினம். என்னோடு வந்த என் நண்பர் (ஒரு உதவி இயக்குனர்) மிகவும் உணர்சிவசபட்டுவிட்டார் (அவரின் இயக்குநரி திட்டிக்கொண்டே).

நன்றி,
சண்முகநாதன்

Aranga said...

நன்றி கிரி , சண்முகநாதன் வந்திருந்தாரா ? அடடா கவனிக்கவில்லையே .

நம்ம மணிசார்தானே , எளிமை என்பதை கொள்கையாக அல்ல , இயல்பாக கொள்பவர் அவர் . கோவையில் இரண்டு நாட்கள் எங்களுடன் இருந்தார் , வெறும் தயிர் சாதம் சாப்பிடுக்கொண்டு .:)

விரிவான பதிவை எதிர்பார்த்தேன் :(

Related Posts Plugin for WordPress, Blogger...