May 21, 2011

விமலாதித்த மாமல்லன் கதைகள்


விமலாதித்த மாமல்லன் கதைகள் படித்துக் கொண்டிருக்கிறேன்.

எட்டு சிறுகதைகளும் இரண்டு குறுநாவல்களும் இதுவரை முடித்திருக்கிறேன். இந்தக் கதைகளின் வயது குறைந்தபட்சம் பதினைந்து ஆண்டுகளில் இருந்து முப்பது ஆண்டுகள் வரை நீள்கிறது. தன் பத்தொன்பதாம் வயதில் முதல் சிறுகதையை எழுதியிருக்கிறார் மாமல்லன்.  அவ்வயதில் இப்படி யோசித்து எழுத முடியுமா என சில சிறுகதைகளைப் படித்ததும் வாய்பிளந்து வியக்கிறேன், குறிப்பாக "இலை" சிறுகதை படிக்கையில். சற்றும் மிகையற்ற சொல்லாடல்கள், நேர்த்தியான கதை சொல்லும் திறன் - எளிமையாகச் சொன்னால் இதுதான் "மாமல்லன்". போகிற போக்கில் உங்கள் கைபிடித்து அழைத்துச் சென்று கதை சொல்கிறார். தான் எங்கும் தனியே தெரிய அவசியமும் தேவையும் இல்லை என்பதில் பிடிவாதமாய் இருக்கிறார். 

"இருபது வயதுகள்" இப்போது எழுதும் கதைகள் எல்லாம் துள்ளல் துடிப்புகளோடு வார்த்தை "ஜெர்க்'குகளை வைத்து உங்களைப் படிக்கச் சொல்பவை. மாமல்லன் இருபதில் எழுதியதில் வார்த்தை ஜால ஈர்ப்புகள் ஏதுமில்லை. நேரே கதை தொடங்குகிறது, நேரே சொல்ல வந்ததைச் சொல்லிப் பயணிக்கிறது, திடீரெனத் தொங்கலில் ஓரிடத்தில் உங்களை விட்டுவிட்டு "புரிஞ்சுதா" என உங்கள் பின்னந்தலையில் தட்டிவிட்டு நிறைகிறது. ஒவ்வொரு கதையை முடித்த பின்னும் என் பின்னந்தலையில் ஒரு தட்டு. வாழ்க்கை, யதார்த்தம், முரண், விகாரம் என்ற தளங்களில் பயணிக்கின்றன  இவர் கதைகள்.

முதல் சில சிறுகதைகளை வாசிக்கும்போதே உள்ளே நமக்குப் பரபரவென்கிறது. கதைகள் கொண்ட கருக்கள் அப்படி. இவ்வாறு நான் சொன்னதும் அவர் ஏதோ வானிலிருந்து உருவிக் கொண்டுவந்த கருக்களைக் கொண்டு கதைகள் புனைந்தார் என்றில்லை. எல்லாமே நாம் அக்கம் பக்கத்தில் அன்றாடம் பார்ப்பவை அல்லது நம்முள்ளேயே நாமே நிதமும் தரிசிப்பவை, அவ்வளவே. கதைக்கான தீம் தேர்வில் மாமல்லன் பெரும் பிரயத்தனம் எல்லாம் செய்யவில்லை. 

கதை சொல்லும் விதத்திலும் அப்படியொன்றும் அலங்காரத் தோரணங்களோ அல்லது சிலாகித்துச் சூள் கொட்ட வைக்கும் வருணனைகளோ இல்லை. அதனையும் "சிம்பிள்" என்றே வைத்திருக்கிறார் மனிதர். ரொம்பவெல்லாம் ஆரவாரமில்லாமல் நேரிடையாகவே கதை சொல்கிறார்.

அப்படியென்றால் இவர் கதைகளை நம்மைப் படிக்கவைக்கிறது எது?  சுகுமாரனின் முன்னுரையையே துணைக்கு அழைக்கிறேன்: மிகையற்ற சொற்கள், நுட்பமான தகவல்கள், பராக்குப் பார்க்காமல் இலக்கை நோக்கி நகரும் வேகம், பாத்திரங்களின் உருவாக்கம், அவர்களின் பின்னணி சார்ந்தே அமையும் உரையாடல், கதையாடலின் நம்பகத்தன்மை ஆகிய இலக்கிய இயல்புகள்; இவைதான் நம்மை இவர் கதைகளின் பக்கம் ஈர்ப்பவை.



"போர்வை" சிறுகதை உங்களுக்குக் காட்டுவது வேறு தரிசனம். காலையில் பல் விளக்குதலில் தொடங்கி இரவில் போர்வைக்குள் அடங்கியுறங்கும் ராவ்ஜியின் ஒரு நாளைய சுயநல சுழற்சியை அவரோடு பயணித்து நமக்குக் காட்டுகிறார் மாமல்லன்.

கணையாழி குறுநாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற "பெரியவர்கள்" படித்தபின் இந்தப் பதிவை எழுதுகிறேன். ஏதேனும் எழுதுவதென்றால் புத்தகத்தை முழுதும் படித்துவிட்டு எழுத வேண்டும் என்று இருந்தவன்,இதற்குமேலும் பொறுமையில்லை என எழுதுகிறேன். மேற்கொண்டு அத்தனை கதைகளையும் படித்து முடிக்கும் அவசரம் எனக்கு இப்போது இல்லை. இத்தனை படித்ததில் இருந்து என்னை சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளத் தேவை இருக்கிறது.

"பெரியவர்கள்" கதையில் வரும் சக்குபாய்கள் பலரை நம் சுற்றத்திலும் நட்பிலும் இன்றைக்கும் நம்மால் பார்க்க முடிவதால் கதையின் போக்கும், முடிவும் நம்மைத் தைக்கிறது. பெரியவர்களைக் கடந்து செல்ல இயலாமல் அங்கேயே நின்று கொண்டிருக்கிறேன் இன்னமும்.

ஏதேனும் எழுதணும் என்னும் உந்துதல் உள்ளவர்களுக்கு இந்தப் புத்தகம் நிச்சயம் ஒரு இன்ஸ்பிரேஷனாக அமையும், சந்தேகமேயில்லை.

பதினாறு ஆண்டுகள் கடந்து மீண்டும் எழுத வந்திருக்கும் மாமல்லன் இன்னமும் நிறைய கதைகள் எழுதி என்போன்ற கடைக்கோடி வாசகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பது மட்டுமே என் அவா!

முழுப் புத்தகத்தையும் வாசித்துவிட்டு விரிவாக இன்னுமோர் பதிவு எழுதுகிறேன். அதற்குள் நீங்கள்....

புத்தகம் வாங்க:
உயிர்மை பதிப்பகம். 
11/29, சுப்பிரமணியன் தெரு,
அபிராமபுரம், சென்னை 600018.
போன்:: 91-44-24993448
மின்னஞ்சல்: sales@uyirmmai. com
விலை ரூ.180/-

ஆன்லைனில் வாங்க: உயிர்மை / கிழக்கு / உடுமலை
.
.
.

2 comments:

ramalingam said...

கணையாழியில் இவரது இலை படித்தபின்தான் எனக்கு இலக்கியம் என்றால் என்ன என்றே புரிய ஆரம்பித்தது.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...