Sep 17, 2011

இது பயணக்கட்டுரை அல்ல - 4

குர்கான்


புதுடெல்லி சென்றிருந்த இரண்டு வாரங்களும் நான் தங்கியிருந்தது புதுடெல்லியின் இரண்டு நவயுகக் கரங்களில் ஒன்றான குர்கானில் (Gurgaon).  நோய்டா (Noida) புதுடெல்லியின் மற்றொரு கரம். என்.ஸி.ஆர். என்று அழைக்கப்படும் நேஷனல் கேபிடல் ரீஜன் உருவாக்கத்தின்போது இவ்விரு பகுதிகளும் கிட்டத்தட்ட டெல்லியின் அங்கம் ஆயின.  டெல்லியைச் சுற்றியுள்ள ராஜஸ்தான், ஹரியானா, உத்திரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து பிழைப்புதேடி குவிந்த வண்ணம் இருந்த மக்களைக் கருத்தில் கொண்டு பதினைந்து வருடங்களுக்கு முன் டெல்லி விரிவாக்கத் திட்டத்தின் கீழ் உருவான பகுதிகள் இவை.

குர்கான் நகருக்கு அந்தப் பெயர் அமைந்ததற்கு இரு வேறு காரணங்கள் கேட்கக் கிடைத்தன. குர்கானின் சரியான உச்சரிப்பு குர்காவோ(ன்). ஹிந்தி பேசுபவர்கள் குட்காவோ(ங்) என்கிறார்கள். கூடு என்றால் ஹிந்தியில் வெல்லம். காவோ(ன்) என்றால் கிராமம். ஒரு காலத்தில் வெல்லச் சந்தைக்குப் பிரபலமான நகராக விளங்கியது குர்கான் என்பது முதலில் எனக்குக் கேட்கக் கிடைத்த காரணம். இரண்டாவது காரணம் சுவாரசியமானது. குரு துரோணாச்சாரியாரின் பூர்வீக கிராமமாக குர்கான் அறியப்படுகிறது. அதனால் குரு-காவோ(ன்) என்று பெயர் என்றும் சொல்கிறார்கள்.

குர்கான் நகரில் பொதுவாக மூன்று விஷயங்கள் மிகப்பிரபலம். ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள், விதவித வகைவகையான கார்கள், தெருவுக்குத் தெரு வியாபித்திருக்கும் ஷாப்பிங் மால்கள். நான்காவதாகத்தான் மனிதர்கள்.

குர்கான் நகரின் பாதியை DLF நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது போலும். எங்கு திரும்பினாலும் அந்த நிறுவனம் எழுப்பிய கட்டிடம் உங்கள் கண்ணுக்குப் புலப்படுகிறது. அவர்கள் எழுப்பிய கட்டிடங்களை நூற்றுக்கணக்கான ஐ.டி. நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து தங்கள் தொழிலைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. எங்கள் கிளையன்ட் அலுவலகமும் DLF 'ன் கட்டிடம் ஒன்றில்தான் அமைந்திருந்தது. குர்கானில் இது போன்ற கட்டிடங்களுக்கு ஏதேனும் எண் குறிப்பிட்டுத்தான் அடையாளம் சொல்கிறார்கள். பில்டிங் சிக்ஸ், பில்டிங் நைன் என்றே குறிப்பிட்டு அடையாளம் இடுகிறார்கள். ஆட்டோக்காரர்கள் கூட பில்டிங் நம்பர் குறிப்பிட்டால் கொண்டு விடுகிறார்கள்.

சென்னையில் எப்போதேனும் கடந்து செல்லும் ஆடி கார்களும், BMW வகைக் கார்களும் அங்கே சர்வசாதாரணமாக வளைய வருகின்றன. ஆகவே, சாதாரண ரகக் கார்கள் பற்றி சொல்லும் அவசியமற்றுப் போகிறது. விரிந்து பரந்த சாலைகளின் பயனில் வாரஇறுதிகளிலும்,வார நாட்களின் மதியப்பொழுதுகளிலும் அமைதியாகக் காணப்படுகிறது போக்குவரத்து. ஆனால், பெருகிவிட்ட கார்களின் எண்ணிக்கையால் வாரநாட்களின் காலைமாலை வேளைகளில் கடந்து செல்வதென்பது பெரும் சாதனைச்செயல் ஆகிவிடுகிறது. அதிலும் மழை நேரங்களில் டெல்லி, குர்கான் பகுதிகளில் பயணப்படுவது கொடுமையான தண்டனை அனுபவிப்பது போல.அங்கே நான் பார்த்த வரையில் நாடார், செட்டியார் வகைக் கடைகளெல்லாம் இல்லை (அந்த ஊரில் சர்தார், சௌகார் என்று கொள்ளுங்களேன்). மக்கள் தெருமுனைக் கடைகளிலெல்லாம் ஏதும் வாங்குவதில்லையோ என்னவோ. என்ன வேண்டுமென்றாலும் ஷாப்பிங் மால்கள் நோக்கித்தான் நீங்கள் நடை நடக்க வேண்டும். அப்படியாகிவிட்டது வாழ்க்கை. அய்யனார் ஏஜென்சீஸ், மகாராஜா ஃபேன்சி ஸ்டோர் என்றெல்லாம் தேடலாகாது. ஆம்பியன்ஸ் மால், மெட்ரோ மால், சென்டர் மால் என எல்லாமுமே மால்கள்தான். உள்ளே போனால் என்ன வேண்டுமோ எல்லாம் கிடைக்கும், நான்கு மடங்கு விலையில். மக்கள் சந்தோஷமாக வாரம் ஒருமுறை அங்கே சென்று வேண்டியது, வேண்டாதது என எல்லாவற்றையும் அள்ளிப்போட்டுக் கொண்டு வந்துவிடுகிறார்கள். வார நாட்கள் அலுவலகத்திற்கு சென்றுவர மட்டுமே ஒதுக்கப்படுகிறது.

பழைய குர்கான் நகரை ஒரு பக்கம் விட்டுவைத்துவிட்டு சமீபத்தில் அசுர வேகத்தில் முன்னேறி வரும் தற்போதைய புதிய குர்கான் நகர் நம்மை சற்றே பயமுறுத்தத்தான் செய்கிறது. மெஷின் லைஃப் என்றால் என்ன என்பதை அங்கேதான் நேரிடையாக தரிசித்தேன். நம் கிராமங்களை ஒப்பிட்டு சென்னை வாழ்க்கையை இயந்திரத்தனமானது எனப் பேசுவதை இனி நிறுத்தித்தான் ஆகவேண்டும்.

சர்வதேச மார்க்கெட்டின் ஜாம்பவான் நிறுவனங்கள் அத்தனை பேரும் குர்கானில் கடை விரித்திருக்கிறார்கள். தெருவுக்குத் தெரு, சந்திற்குச் சந்து ஏதேனும் ஐ.டி. கம்பெனியோ, பி.பீ.ஓ. நிறுவனமோ அல்லது வேறு இந்திய நிறுவனம் ஒன்றின் நிர்வாக அலுவலகமோ அல்ட்ரா மாடர்ன் அலங்காரங்களுடன் மின்னுகிறது. இரவு நேரப் பயணங்களில் எண்பதுகளின் அமெரிக்க நகரங்களைப் படம் பிடித்த நம்மூர் சினிமாக்களை நினைவூட்டுகிறது குர்கான்.

அது இல்லை இது இல்லை, அது ஓவர் இது ஓவர், வாழ்க்கை எந்திரமயம், அப்படி இப்படி என என்ன குறைகளை குர்கான் மீது அள்ளித் தெளித்தாலும் ஒரு விஷயத்தில் குர்கானை இந்தியாவின் தலைசிறந்த நகர் எனலாம். அது வேலைவாய்ப்பு. ஊரில் இறங்கி நான்கு நாட்கள் அலைந்தீர்கள் என்றால் யாருக்கும் வேலை நிச்சயம். அப்படிப்பட்ட நிறுவனங்களும் வாய்ப்புகளும் நிறைந்த நகரமாகும். ஒரு பக்கம் இதை நிறை எனக் கூறினாலும் இன்னொருபுறம் நிறுவனங்கள் திறமைகளை தக்கவைத்துக் கொள்ள இங்கே படாதபாடு படுகின்றன. காரணம் வேலைவாய்ப்பு இங்கே அதிகம் என்பதால் பணித்தாவல்களும் எக்கச்சக்கம்.

குர்கான் பற்றி அவ்வளவுதான். இனி டெல்லி பற்றியும் ஆக்ரா பயணம் குறித்தும் பார்க்கலாம்.
.
.
.

6 comments:

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

குர்கான் நகர் பற்றி அதிகம் அறிந்துகொள்ளத் தந்தமைக்கு நன்றி

தமிழ்வாசி - Prakash said...

பகிர்வுக்கு நன்றி....

என் வலையில்:
சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்? ஜே அறிக்கை: ஒரு பார்வை

Breeze said...

Well written article Giri

Rathnavel said...

நல்ல பதிவு.

Pulavar Tharumi said...

இந்தக் கட்டுரையின் மூலம் குர்கான் பற்றி தெரிந்துக் கொள்ள முடிந்தது. டெல்லி, ஆக்ரா கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன் :)

கிரி ராமசுப்ரமணியன் said...

பின்னூட்டமிட்ட அனைவர்க்கும் மிக்க நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...