Sep 19, 2011

400 நாட் அவுட்

இது நம் நானூறாவது பதிவு!

ப்ளாக் ஆரம்பிச்சு மூணு வருஷமாச்சு! இதுவொண்ணும் பெரிய சாதனை இல்லை. இருந்தாலும் சொல்லிக்கறாப்ல இருக்கே நம்பர்! அதனால இதைக் கொண்டாடும் விதமா போன வருஷம் இதே நேரம் நான் எழுதின சிறுகதை மீள் பதிவிடப்படுகிறது.

இனி நீங்களாச்சு நம்ம கதையாச்சு!உன் வித்தையெல்லாம் தாடீ... (சிறுகதை)
"அசிஸ்டன்ட் டைரக்டர் ஆகறது இப்போ ரொம்ப கஷ்டம். அதுக்குன்னு வடபழனி, திருவல்லிக்கேணியில நாலு லட்சம் பேரு மேன்சன் எடுத்து தங்கி தவம் செஞ்சிட்டு இருக்காங்க. நீ மொதல்ல பாட்டு எழுதற வழி பாரு. இந்த டைரக்டர் ரொம்ப இல்லன்னாலும் கொஞ்சம் பிரபலம். நமக்கு ஒருவகைல வேண்டப்பட்டவரு. நான் சொன்னா ஏதாவது நல்லது நடக்க வாய்ப்பு இருக்கு. கதவை தட்டிப் பாப்போம்" என என்னை இங்கே அழைத்து வந்திருக்கிறான் மணி.

மணி எங்கள் ஊர்க்காரன். என்னைவிட இரண்டு பள்ளி வருடங்கள் பெரியவன். பள்ளி காலத்திலேயே நான் கவிதைகளில் புகுந்து விளையாடுவேன். பின்னர் கல்லூரியில் அது கொஞ்சம் மெருகேறி இன்று ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்ட அளவிற்கு இன்று எங்கள் ஊரில் நான் பிரபலம்.

சினிமாவில் என் எழுத்து, பாடல் ஒலிக்கவேண்டும் என்று என் சுற்றமும் நட்பும் வேண்டி விரும்பி சென்னையில் சினிமாவில் ஏதோவாக இருக்கும் மணி வசம் என்னை ஒப்படைத்து, கடந்த இரண்டு மாத காலமாக அங்கு இங்கென்று திரிந்து இப்போது இந்த டைரக்டர் வாசற்படியில் காத்திருக்கிறோம்.

"வணக்கம் சார்!"

என்னுடன் அமர்ந்திருந்த எல்லோரும் எழுந்து அவருக்கு மரியாதை சொன்னார்கள். நானும் சம்பிரதாயம் மாற்றும் எண்ணமில்லாது எழுந்து நின்று அவரை வணங்கினேன். எல்லோரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு எங்கள் வணக்கங்களை அறை மூலையிலிருந்த குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டு விடுவிடுவென படியேறிச் சென்றார்.  

இங்கு அமர்ந்திருந்த இந்த அரை மணிநேரத்தில் ஐம்பது முறை என்னை மேலும் கீழும் நோட்டமிட்ட அந்த குறுந்தாடிக்காரன், அவர் பின்னே சென்றவனைத் தட்டி அழைத்து, "டைரக்டர் மூடு இன்னைக்கி எப்படி?", எனக் கேட்க உதடு பிதுக்கி, தோள்களைக் குலுக்கி "ஒன்றும் சரியில்லை", என சைகையில் பதில் வந்தது.

என்னை அழைத்து வந்திருந்த மணி, "நீ ஒண்ணும் கவலைப்படாதே", என அவன் பங்கிற்கு தலையசைத்து சைகை செய்தான். இங்கே எல்லாம் சைகை மொழிதான் எனப் புரிந்தது.

மணியிடம் பேசியதில் அவன் இங்கு இருக்கும் பல சினிமா பிரபலங்களுக்கு "பணிவிடைகள்" பல செய்பவன் எனத் தெரிந்தது. யாரிடமும் அவனுக்கு பெரிய மரியாதை இல்லை, இருந்தாலும் எல்லோருக்கும் அவன் தேவை இருந்தது.

மாடியில் இருந்து டைரக்டரின் ஓங்கிய குரலில் ஏதேதோ கெட்ட வார்த்தை வசவுகள் கேட்ட வண்ணம் இருந்தன. எனக்கு சங்கடமாய் இருக்க, குறுந்தாடி அவ்வப்போது நமட்டுச் சிரிப்பு சிரித்தவண்ணம் இருந்தான். "இவங்க எல்லாம் இப்படித்தான்", மீண்டும் சைகை மொழியில் சொல்லிக் கண்ணடித்தான்.

சில மணிநேரக் காத்திருப்பிற்குப் பின் டைரக்டரை சந்திக்க மேலே சென்றோம். சுற்றி மூன்று துணைகள் அமர்ந்திருக்க. தரையோடிருந்த அந்த சின்ன ஸ்டூலில் ரொம்பவும் சாவகாசமாக அமர்ந்திருந்தார் டைரக்டர். 

"மணி உங்களைப் பத்தி போன்ல சொன்னாப்போல. சொல்லுங்க, உங்க லட்சியம் என்ன?"

திடீரென இன்டர்வியு போல என்னை நோக்கி வீசப்பட்ட எதிர்பார்த்திராத கேள்விக்கு பதிலளிக்கத் தடுமாறினேன்.

"சரி ஒண்ணும் பிரச்னை இல்லை, உங்களுக்கு என்ன ஊரு?", என மணியைப் பார்த்தார்.

"ராஜபாளையம் பக்கம் வாசுதேவநல்லூர் சார்", என்றேன் நான்.

"அட, நம்ம சூர்யா ஊரு. அவரு பழக்கமா உங்களுக்கு?", மீண்டும் மணியைப் பார்த்த கேள்வி. 

"இல்லை சார், பார்த்ததுண்டு பழக்கமில்லை", இது நான்.

"நமக்கு இங்க பழக்கமுண்டு சார்", நமட்டுச் சிரிப்பு சிரித்தான் மணி. மூன்று துணைகளும் ஏதோ புரிந்து விழுந்து விழுந்து சிரித்தன. 

"சரி, நீங்க எழுதின எதாவது கொண்டு வந்திருக்கீங்களா?" எனக் கை நீட்டினார். 

நான் கொடுத்ததைப் பார்த்தவிட்டு அதை பக்கத்திலிருந்த ஒரு துணையிடம் கொடுத்தவாறே, "நல்லா இருக்கு, இருந்தாலும் எனக்கு இது போல தளை தட்டாத கவிதை அவ்வளவு பரிச்சயம் இல்லை. அது இங்க நம்ம சினிமாவுக்குத் தேவையும் இல்லை. அது ஒண்ணும் பிரச்னை இல்லை, நீங்க வர்ற சனிக்கிழமை வடபழனி ராதா ரெகார்டிங்குக்கு வாங்க. யோவ் மணி, அழைச்சிட்டு வந்துடுய்யா", என்றுவிட்டு என்னைப் பார்த்து, "ஒண்ணும் பிரச்னை இல்லை பார்த்துக்கலாம்", உதடு விரித்து நீண்ட புன்னகை செய்து ஒரு வணக்கம் சொல்லி நீங்க இப்போ போகலாம் என்று சைகையால் சொன்னார்.

புறப்படுமுன், "சார், என்னோட லட்சியம் தரமான பாடல்களை தமிழ்ல கொடுக்கணும் சார், ஸ்டீரியோ டைப் பாடல்கள்ல இருந்து தமிழ் சினிமாவை மீட்கணும்", என்றேன். சொன்னது தவறோ என எனக்குத் தோன்றி மறையுமுன்....

"அப்போ நாங்க எல்லாம் தமிழ் சினிமாவை சீரழிக்கறோம், நீங்க வந்து எல்லாத்தையும் மாத்தப் போறீங்களா", ஒரு துணையிடமிருந்து எகத்தாளக் கேள்வி வந்தது.

"டேய்", என்று அந்தத் துணையை முறைத்து, "ஒண்ணும் பிரச்னை இல்லை, இருக்க வேண்டியதுதான். எல்லாரும் அப்படித்தான் வர்றாங்க. உங்களையும் உபயோகிச்சிக்க என்னோட இந்த ஸ்கிரிப்டுல இடம் இருக்கு. சனிக்கிழமை பாக்கலாம்", மீண்டும் உதடு விரித்த புன்னகை வணக்கம்.

பெர்முடாஸ் பனியனில் வந்திருந்தார் டைரக்டர்.

"இங்க பாருங்க தம்பி, சிச்சுவேஷன் இதுதான் இது ஒரு முதலிரவுப் பாட்டு. கொஞ்சம் பெப்பியா ஏதாவது யோசிங்க. மியூசிக் டைரக்டர் இன்னைக்கு வரலை. அவர் அசிஸ்டன்ட் கிட்ட டியூனைக் குடுத்து விட்டிருக்காரு, அவரோட உட்காருங்க", உத்தரவு தந்துவிட்டு உள்ளே மறைந்தார்.

என்னுடன் இரண்டு துணைகள் முகாமிட்டன. அந்த டியூனை புரிந்து கொள்ள எனக்கு மிகச் சிரமமாக இருந்தது. கொஞ்சம் நிறையவே நேரம் பிடித்தது.


"அத்தையின் மகளே மெத்தையில் நிலவே", என ஆரம்பித்து நான்கு வரிகள் எழுதினேன். அங்கங்கே தளை தட்டுகிறதா என சரி பார்த்துக் கொண்டேன். துணைகள் இரண்டும் என்னை கொஞ்சம் விசித்திரமாகப் பார்த்தன. அந்தப் பாடலின் வேகத்திற்கு என் வரிகள் பொருந்தியதாய்த் தெரியவில்லை.

"நல்லா இருக்கு சார் நல்லா இருக்கு, ஆனா இது கொஞ்சம் பெப்பி பாட்டு பாருங்க, நாம கொஞ்சம் வரிகளை இங்க அங்க மாத்தி முயற்சி பண்ணலாமே", ஒன்றாய்ச் சொல்லின டைரக்டர் துணையும், மியூசிக் டைரக்டர் துணையும்.

அத்தைப் பொண்ணு வாடி
மச்சான் என்னை நாடி
மெத்தை அது மேல
வித்தையெல்லாம் தாடீ...

இப்படிப் பாடலின் ஆரம்ப வரிகள் மாறிப்போக, இதை எழுதினது நான்தானா என நான் யோசித்து முடிக்குமுன் மேலும் இலைமறை காய் மறையாக நான் எழுதிய அனைத்தும் உடைத்துச் சொல்லப்பட்டன.

"சார், அங்கங்கே கொஞ்சம் பச்சை பச்சையாய் வருதே..." என நான் இழுக்க...,
"அட அதெல்லாம் யாருப்பா பார்க்கறாங்க, இப்போ எல்லாம் சத்தம் போதும் சார், சந்தம் பத்தியெல்லாம் யோசிக்காதீங்க. மொதல் பாட்டு அமைஞ்சி இருக்கு. கொஞ்சம் வளைச்சி நெளிச்சி எழுதுங்க. கொஞ்சம் பேரு வாங்கிட்டா அப்புறம் நீங்க சொல்றதுதான்", என்றது காத்திருந்த அடுத்த துணை.  சரிதான் என நினைத்துக் கொண்டேன்.

இரண்டு நாட்களில் மொத்தப் பாடலும் முடிவானது. மகேந்திரன் என்ற என் பெயர் தமிழ்மதி ஆனது. இரண்டு மாதங்களில் பாடல் வெளிவந்து, அடுத்த இரண்டு வாரங்களில் இந்தப் பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் எதுவும் நான் எதிர்பாராதது. படம் வெளிவரும் முன்னரே பாடல் எழுதிய என் பேட்டி இரண்டொரு பிரபல பத்திரிக்கைகளில் வந்தும் விட்டது.

ப்படி இப்படி ஒன்றரை வருடங்களை சென்னையில் ஓட்டியாயிற்று. என் பெயருக்குப் பின்னால் இப்போது ஐம்பது பாடல்கள் எழுதிய கவிஞன் என்ற தகுதி ஒட்டிக் கொண்டுள்ளது. தமிழ் சினிமா கூறும் நல்லுலகில் இன்று நானும் ஒரு பெயர் சொல்லும் பாடலாசிரியன். என்னிடமும் இப்போது இரண்டு துணைகள் ஒட்டிக் கொண்டுள்ளன.

டைரக்டர் அழைத்திருந்தார். அவர் அடுத்த படத்திற்கு எல்லாப் பாடல்களும் நானே எழுதுகிறேன்.

அன்று அமர்ந்திருந்த அதே நாற்காலியில் இன்றும் அமர்ந்திருக்கிறேன். அதே குறுந்தாடி இன்று எனக்கு வணக்கம் வைத்தது.

மேலிருந்து குரல் கேட்டது, 

"அப்புறம், சொல்லுங்க உங்க லட்சியம் என்ன?"

"சார், தரமான பாடல்களை தமிழ்ல கொடுக்கணும், ஸ்டீரியோ டைப் பாடல்கள்ல இருந்து தமிழ் சினிமாவை மீட்கணும் சார்"

சரிதான் என்று நினைத்துக் கொண்டேன். குறுந்தாடி இப்போது என்னைப் பார்த்து பலமாய்ச் சிரித்தது.
.

2 comments:

natbas said...

வாழத்துக்கள் சார்.

நாநூறாவது பதிவு அறிவிப்பு மாதிரி கூடிய சீக்கிரமே நாநூறாவது சிறுகதை அறிவிப்பையும் எதிர்பார்க்கறேன்.

வாழ்க! வளர்க!

Rathnavel said...

வாழ்த்துக்கள் - இன்னும் நிறைய எழுதுங்கள்.
நல்ல பதிவு.

Related Posts Plugin for WordPress, Blogger...