Oct 8, 2011

காட்டில் ஒரு பிரேதம்போல நான் என்றும் மிதப்பேன்

சினிமாப் பாட்டுப் புத்தகங்களை இன்னும் எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்? எட்டே எட்டு பக்கங்கள், நைந்து போன அழுக்கான காகிதம், முன்னட்டையில் படத்தின் பெயர், பின்னட்டையில் அச்சிட்டவரின் சுய பிரஸ்தாபம். முன்பக்க உள் அட்டையில் படத்தில் நடித்த நடிக நடிகையர்கள் பெயர்ப் பட்டியல். பின்பக்க உள் அட்டையில் படத்தின் கதைச் சுருக்கம் வரைந்து "மற்றவை வெள்ளித் திரையில்" என்ற இலவச விளம்பரத்துடன் மீதமுள்ள பக்கங்களில் படத்தின் பாடல்கள் இருக்கும்.

என் பள்ளிப் பருவத்தில் பத்து பைசா கொடுத்தால் ஒரு பாட்டுப் புத்தகம் கிடைக்கும். பின்னர் அது விலை ஏறி ஐம்பது பைசாவுக்கு விற்றது வரையில் நினைவிருக்கிறது. இப்போதெல்லாம் அவை வருவதில்லை என நினைத்திருந்த வேளையில் மடிப்பாக்கம் பஸ் நிலையம் அருகில் ஒரு கடையில் சரம் சரமாக பாட்டுப் புத்தகங்கள் தொங்கக் கண்டேன்.



“எவ்ளோண்ணா?”

“ரெண்டு ரெண்டு ரூபா”

“ஒண்ணு தர மாட்டீங்களா?”

“ஒண்ணு ஒர்ரூவா”

வித்தியாசமான கடைக்காரராக இருக்கிறாரே என “கோ”வும் “தெய்வத் திருமகள்’ இரண்டையும் எடுத்து பேக் செய்யச் சொன்னேன்.

ஸ்கூல் தினங்களில் கட்டுக்கட்டாய் சேர்த்து வைத்த நூற்றுக்கணக்கான பாட்டுப் புத்தகங்கள் எங்கே போயின எனத் தெரியவில்லை. பரணில் ஏதும் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். உண்மையில் சொன்னால், குரலை முன்னணியில் வைத்து வாத்தியங்களைப் பின்னணியில் வைத்த பழைய பாடல்களுக்கு பாட்டுப் புத்தகங்களே தேவையில்லை. பின்னணியிசை எப்போது முன்னணியிசை ஆனதோ அப்போதுதான் இவற்றின் தேவை இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இந்தப் புத்தகங்களின் நம்பகத்தன்மை (!!) பற்றித் தனியே பேசலாம். இவற்றை அச்சிடுபவர்கள் கையில் கிடைத்தால் சில நேரங்களில் ஒரிஜினல் கவிஞர்கள் அவர்களைப் பந்தாடும் சாத்தியம் இருக்கிறது. வடக்கத்திப் பாடக பாடகிகள் பண்ணும் பிழைகளுக்கு இணையாக அத்தனை பிழைகள் நிறைந்திருக்கும் இப்புத்தகங்களில்.

பாட்டுப் புத்தகங்கள் ஆன்லைன் பாடல்வரித் தளங்களாக  உருவெடுத்துவிட்டிருந்தாலும் இப்பிழைகள் காலத்தோடு, டெக்னாலஜியோடு சேர்ந்து தொடர்வது தனிக்கதை. ஒரு உதாரணம் இங்கே:


இப்படி வரும் பிழைகளில் என்னால் மறக்கவியலாத ஒரு பிழை முன்பு நான் வாங்கிய “மே மாதம்” பாட்டுப் புத்தகத்தில் இருந்தது.

”மார்கழிப் பூவே” பாடலை எல்லோரும் அறிவீர்கள். அதில் வரும் ஒரு வரி, “காற்றில் ஒரு மேகம் போலே நான் என்றும் மிதப்பேன்”. அது தவறுதலாக எப்படி வந்திருந்தது என்றால்.....

இந்தப் பதிவின் தலைப்பைப் பாருங்கள்! அப்படி வந்திருந்தது.



5 comments:

ரமேஷ் வைத்யா said...

நானும் பாட்டுப் புத்தகப் பிரியன்தான். பத்து காசு இருபது காசுக்கு வாங்கி ஏகப்பட்டது சேர்த்துவைத்திருந்தேன். அதற்காக வாங்காத அடி உதை இல்லை. பெரும்பாலும் அந்தப் புத்தகங்களை சிவகாசியில் தான் அச்சிடுவார்கள். அங்குள்ள தொழிலாளி பாட்டைக் கேட்டு எழுதுவதால் பிழைகள் மலிந்து காணப்படும்.
பதிவுக்கு நீங்கள் வைத்திருந்த தலைப்பு அருமை.

natbas said...

அருமையான பதிவு. மிக்க நன்றி.

Giri Ramasubramanian said...

@ரமேஷ் வைத்யா

அடடா! சீனியர் மோஸ்ட் வந்திருக்கீங்க! வாங்க வாங்க! கருத்துக்கு நன்றி!

@ நட்பாஸ்

வழக்கம்போல் நன்றிகள் :)

Anonymous said...

கடைசியாக தேவி தியேட்டர் அருகே பிளாட்பாரத்தில் ஒருவர் பாட்டு புத்தகம் விற்றதை பார்த்திருக்கிறேன். இப்போது சென்னையில் அவற்றை எங்கு விற்கிறார்கள் என்று தெரியவில்லை.

நெல்லி. மூர்த்தி said...

என் சிறு வயது சிந்தனையைக் கிளறி விட்டீர்கள். பிழை பாடல் புத்தகத்தில் மட்டுமல்ல... பாடுபவர்களிடமிருந்தும் சில நேரங்களில் எழும். ‘பிரியமான பெண்னைக் கேட்கலாம்.. தப்பில்ல...” எனும் வரிகளில் பிரியமான எனும் வார்த்தைக்கு பதிலாக ’பெரிய(ம்)மாவின்’ என்று அமைந்ததாய் கவியரசு வைரமுத்து அங்கலாய்த்தது தான் ஞாபகம் வருகின்றது

Related Posts Plugin for WordPress, Blogger...