Apr 8, 2012

மூன்று - அழகான காதலும் பாழாய்ப் போன தற்கொலையும்

இன்று காலை கலைஞர் தொலைக்காட்சியின் “நாளைய இயக்குனர்” நிகழ்ச்சியில் ஒரு அழகிய குறும்படம். மலை மீதிருந்து குதித்து இறப்பவர்கள் உடலை அள்ளி வரும் தொழில் செய்பவன் ஒருவனின் பார்வையில் தற்கொலைக்கு எதிரான கருத்து அக்குறும்படத்தில் அழுத்தமாகப் பதியப்பட்டது. Elimination கட்டாயங்களைக் கருத்தில் கொண்டு நடுவர் நாற்காலியில் இருந்த இயக்குனர் வெற்றிமாறன் அந்தக் குறும்பட இயக்குனரிடம் பதில் சொல்ல முடியாத சில கேள்விகளைக் கேட்டு திகைக்க வைத்ததுவும், அதன் மூலம் அந்த ரசிக்கத்தக்க குறும்படத்தை ஏதோ ஒரு உருப்படியில்லாத குறும்படம் என்ற பாங்கிற்கு கிட்டத்தட்ட இடக்கையால் புறந்தள்ளியதும் இந்தப் பதிவிற்கு அனாவசியம்.

தன் தொழில் அனுபவத்தில் நேராத அதிசயமாக தான் தேடிப் போன ஒரு உடல், உயிருள்ள மனிதனாகக் கிடைக்கிறது கதை நாயகனுக்கு. மலையிலிருந்து குதித்த ஒரு மனிதன் உயிருடன் இருக்கிறான். அவன் வீடுவரை அவனை சுமந்து வருகிறான் நாயகன். உயிருடன் இருந்தவன் அவன் வீட்டு வாசல் வரை வந்த பிறகு பார்த்தால் சலனமற்ற சடலமாகிக் கிடக்கிறான்.

அவன் உயிர் பிழைத்தது எப்படியெனத் தெரியவில்லை, இறந்ததுவும் எப்படியெனப் புரியவில்லை. நிர்க்கதியில் நிற்கும் அவன் குடும்பத்தைப் பார்த்து நிலைகுலைகிறான் கதை நாயகன். தற்கொலை எண்ணத்துடன் மலைமுகடு தேடி வருபவர்களுக்கு ”வேண்டாமய்யா, உன் குடும்பமும் செத்துப் போகும்” என்று அறிவுரை வழங்கும் ஒரு பலகையை எழுதி அவன் அங்கே நடுவதாக குறும்படம் நிறைகிறது.

ற்கொலைகள் செத்துத் தொலைப்பவர்களுடன் செத்துத் தொலைப்பதில்லை. அவை செத்தவனைச் சார்ந்தவர்கள் வசம் விட்டுப் போகும் ஆறா ரணங்கள் காலங்கள் கடந்தும் நிலைத்து நிற்பவை. அப்படிப்பட்ட தற்கொலை ஒன்று விதைத்துப் போகும் நினைவுகளில் விரிகிறது மூன்று திரைப்படம். 

1) தனுஷ் - ஸ்ருதிஹாசன் இடையே பூக்கும் பள்ளிப்பருவக் கன்றுக்குட்டிக் காதல்.

2) கல்லூரிப் படிப்பை முடித்தபின் அவர்கள் இருவரும் குடும்பங்களின் எதிர்ப்பு கலந்த சம்மதத்துடன் திருமணம் முடிப்பது.

3) முதலில் கல்யாணத்திற்குப் பிந்தைய அவர்களின் அழகிய ரொமாண்டிக் வாழ்க்கை. பின்னர் ”பை போலார் டிஸார்டர்” என்னும் மனநோயால் பாதிப்பிற்கு உள்ளாகும் தனுஷ், அந்த ட்ஸார்டரை அவர் தன் நெருங்கிய நண்பன் தவிர்த்து யாருக்கும் சொல்லாமல் கடைசியில் செத்துப் போவது.

இந்த மூன்று நிலைகளைப் பேசுவதால் மூன்று என்பது தலைப்பு என நினைக்கிறேன். :)

நன்றி: சென்னைஆன்லைன்.காம்

கமர்ஷியல் நிர்பந்தங்கள் சார்ந்த படத்தின் மேக்கிங் தாண்டி நமக்குப் படம் சொல்லும் கருத்து ஒன்றுதான். பேரழகாய்ப் பூத்த ஒரு காதல், இத்தனை பிடிவாதமாக ஆனால் பெற்றோர் சம்மதத்துடன் பண்ணிக் கொண்ட கல்யாணம், அதன் தொடர்ச்சியான அழகானதொரு வாழ்க்கை இத்தனையையும் ஒரு பாழாய்ப் போன தற்கொலை புரட்டிப் போடுகிறது. தான் கொண்ட மனநோயை தன் உயிருக்கு உயிரான நாயகியிடம் மறைக்கிறான் நாயகன். அதுவே அவனைத் தற்கொலைக்கு தள்ளும் காரணியாகிப் போகிறது.

கத்திமேல் நிற்கும் ஒரு சப்ஜக்டை முதல் படத்திலேயே இயன்ற வரை அழகாக, தைரியமாகக் கையாண்ட இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷுக்கு நம் ஸ்பெஷல் பாராட்டுகள்.

எப்போது என்ன செய்வோம் என்பது தெரியாத ஒரு மனோவியாதியில் தவிக்கும் தனுஷ் இந்த கதாபாத்திரத்தை இதற்கு முன் பலமுறைகள் பண்ணிவிட்டதால் நமக்கே ஒருவித அயர்ச்சி, சோர்வு நேர்வதைத் தவிர்க்க இயலவில்லை. எனினும் அந்த அயர்ச்சியும், சோர்வும் நம்மைத் தாக்காமல் வழக்கம்போல் தன் ஒவ்வொரு அசைவிலும் பின்னிப் பெடலெடுக்கிறார்.

ஸ்ருதிஹாசன் பாத்திரமறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக தான் அமெரிக்கா போவதாக தனுஷிடம் சொல்லும் காட்சியில் தனுஷின் கோபத்திற்கு அவர் காட்டும் ரீயாக்‌ஷன் க்ளாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

படத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதியின் நெருக்கம் பற்றி எல்லா விதங்களிலும் எல்லா ஊடகங்களும் பேசிவிட்டன. அந்த நெருக்கத்தில் ஒரேயொரு துளிக்கூட ஆபாசம் இல்லை என்பது பற்றிப் பேசத்தான் யாருக்கும் நா எழவில்லை பாவம். 

படம் முடிகையில், “எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல”, என்னும் சர்வ ஜாக்கிரதையான ஸ்லைடு காட்டப்படுகிறதே ஒழிய, இதுபோன்ற டிஸார்டரில் இருப்பவர்கள் கட்டாயம் என்னத்தைச் செய்திருக்க வேண்டும் என்பதை ஓங்கி அறைந்தாற்போல் சொல்லவில்லை.

மனநோயும் மற்ற நோய்களைப் போல அனைவரிடமும் பகிரக் கூடிய, விவாதிக்கத் தக்க ஒரு நோயே என்பதையும், இது போன்ற நோயாளிகள் தங்கள் நெருங்கிய சுற்றத்தாரிடம் இவற்றை மறைக்காமல் தெரிவித்து சிகிச்சை பெற்றுக் கொள்தல் இவர்களை தற்கொலை என்னும் பேராபத்து வரை இழுத்துச் செல்லாமல் காக்கும் என்பதையும் டைரக்டர் தெளிவாகச் சொல்லவில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

மற்றபடி இப்படிப்பட்ட ஒரு ஸ்லோ அண்ட் ஸ்டெடி மூவியை தமிழ் ட்விட்டர் சமூகத்தினரும்,  தமிழ் வலைப்பதிவினரின் பெரும் சாராரும் வழமை மாறாமல் அடித்துத் துவைத்திருப்பதைக் கண்டபடி கண்டிக்கிறேன்.

3 comments:

Jayadev Das said...

உண்மைத் தமிழன் இந்தப் படத்தில் குறையே இல்லைன்னு பாராட்டி பதிவு போட்டிருக்காரு, போய் கை குலுக்கிகோங்க.

Mohan V said...

Good review..but sensational post title to get clicks. Forgiven

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான விமர்சனம் !

Related Posts Plugin for WordPress, Blogger...