Nov 30, 2010

நந்தலாலா- நெஞ்சைத் தொட்ட அனுபவம்

சிறப்புப் பதிவர்- சுனில் குமார்.


வெளியே சுற்றித் திரிய வகையில்லாமல், மழை பெய்துக் கொண்டிருந்த போன சனிக்கிழமை நேரம் போக்குவதற்காக ஒரு தியேட்டரில் புகுந்து நந்தலாலா படத்திற்கு டிக்கெட் எடுத்தேன்.

வழக்கமான தமிழ்ப்படம் போல் இரண்டு சண்டை, நான்கு பாட்டு, அதிலும் ஒன்று குத்துப் பாட்டு, ஹீரோயின் அதிர்ச்சி அடையும்போது புயல் நின்று போவது, என்றெல்லாம் ட்ரேட் மார்க் டைரக்ஷன் டச் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.

எதுவுமே இல்லை. படம் முதிந்து லேசான மழையில் நனைந்து கொண்டே வீட்டுக்கு வரும்போது படத்தைப் பற்றி நினைத்துக் கொண்டே நடந்தேன்.

தாயைத் தேடி ஒரு சிறுவனும் இளைஞனும் ஒரு கிராமத்துக்குப் போகிறார்கள். அவர்களின் சாலை வழி பயணத்தில் நமக்கு கிடைக்கின்றன - வாழ்க்கையின் யதார்த்த அனுபவங்கள்.

சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் தன்னை மனநலக் காப்பகத்தில் விட்டுப் போன தன் அம்மாவைத் தேடிக் கண்டுபிடித்துத் திட்ட வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறான்.

தன்னைப் பாட்டியிடம் விட்டுவிட்டு திரும்பி வராமல் போன அம்மாவைக் கண்டுபிடித்து ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்று அந்த சிறுவன் இருக்கிறான்.

லாரி டிரைவர், போலியோவால் பாதிக்கப்பட்ட ஒருவர், பள்ளி மாணவி, காரில் வரும் பணக்காரப் பொறுக்கிப் பசங்கள், இரண்டு தடியர்கள், இளநீர் வியாபாரி, கிராமத்து மனிதர்கள், கிராமத்துக் காற்று, வயல், டிராக்டர், பூரான், பாம்பு என எல்லாவித கேரக்டர்களும் ஒரு விலைமாதுவும் அவர்களின் பாதையில் இணைகிறார்கள். பல இடங்களில் வசனங்களே இல்லை.

சிறுவனின் அம்மாவை மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் பளாரென்று கன்னத்தில் அறைவது ஒரு மௌன யுத்தம்.

அந்த சிறுவனையும் இளைஞனையும் தவிர மற்ற எல்லா கேரக்டர்களும் பத்து நிமிடங்களே மின்னி மறைந்தாலும் நந்தலாலா படம் நம் மனதில் நிலைத்து நிற்கும்.

நந்தலாலா ஒரு சூப்பர் படம். தயவு செய்து ஒரு முறையாவது இந்தப் படத்தைப் பாருங்கள். தியேட்டருக்குப் போய் பாருங்கள். நல்ல ஒரு அனுபவம்- என்ன ஒன்று, மிஷ்கினின் டைரக்சன் இசை ஞானி இளையராஜாவின் இசையை அங்கங்கே அடக்கி வாசிக்கும்படி செய்துவிட்டது. அது ஒன்றுதான் என் வருத்தம்.

நீரோடையில் நீந்திக் கொண்டிருக்கும் செடிகளில் ஆரம்பித்த ஒளிப்பதிவு - கேமரா ஆங்கிள் பல இடங்களில் மேலே மேலே போகிறது.

கொக்குஜீரோவோ என்னவோ ஒரு ஜப்பானியப் படத்தின் சாயல் இருக்கிறது என்று சொல்கிறார்கள்- எனக்கென்னவோ படமெங்கும் தமிழ் மணம் கமழ்வதாகத்தான் தெரிகிறது.

போனஸ்:


நந்தலாலா படத்தில் இளையராஜா இதுவரை யாரும் தொடாத சிகரங்களைத் தொட்டு விட்டார் என்று படம் பார்த்தவர்கள் பலர் சொல்கிறார்கள்- படத்தில் நெஞ்சைத் தொடும் இருபத்தைந்து இடங்களில் இசை ஞானி இசைத்த பின்னணி இசை இங்கே இருக்கிறது- Backgroundscore.com. கேட்டு மகிழுங்கள்.
.
.
.

6 comments:

Unknown said...

நல்லா இருக்கு உங்க பார்வை! :-)
கொஞ்சம் நம்ம பக்கம் வாங்க

Unknown said...

/எனக்கென்னவோ படமெங்கும் தமிழ் மணம் கமழ்வதாகத்தான் தெரிகிறது//
:))

சிவராம்குமார் said...

"எனக்கென்னவோ படமெங்கும் தமிழ் மணம் கமழ்வதாகத்தான் தெரிகிறது."

உண்மை!!!

Giri Ramasubramanian said...

@ ஜீ
ரொம்ப நன்றி. உங்களை என் ரீடர்ல இணைச்சிட்டேன் ஜீ..!

@ சிவா..
நன்றி.
உங்க ஊரு தமிழ்நாட்லயே எனக்கு ரொம்பவும் புடிச்ச ஊரு. என் வாழ்வின் இனிமையான சில தருணங்கள்ல , அகத்தியர் அருவிக் குளியலும், காரையாறு படகு சவாரியும் ரெண்டும் முக்கியப் பங்கு வகிப்பன.

natbas said...

ஜி, இந்த மாதிரி புதிய பதிவர்களுக்கு சிறப்புப் பதிவர் என்று அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் கொடுத்து ஊக்கப்படுத்துகிறீர்கள்- நன்றி.

இளங்கோ said...

இன்னும் படம் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...