Dec 19, 2010

இசைக் கோலங்கள் - உயிரும் நீயே உடலும் நீயே


தமிழ்சினிமா உலகமானது அம்மா செண்டிமெண்ட் படங்களுக்கு மட்டுமல்ல அம்மா செண்டிமெண்ட் பாடல்களுக்கும் பிரபலமானது. இசைஞானி இளையராஜா அவர்கள் இந்த சப்ஜெக்டை ஒரு காலத்தில் தானே குத்தகைக்கு எடுத்து கோலோச்சி வந்தார்.

ரஹ்மானின் வரவிற்குப் பின் தமிழ் சினிமா இசை டிஜிட்டல் மயமாகிப் போனது. ருக்குமணியே ருக்குமணிகள் மற்றும் நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்கா நீங்க மோட்டார் பைக்கத்தான் பாப்பீங்க என வலித்து வலித்து பாடப்பட்ட பாடல்களின் புண்ணியத்தில் பழைய க்ளிஷேக்கள் சற்றே மறக்கப் பட்டிருக்க, திடுமென இடையில் புகுந்தது இந்தப் பாடல்.



மறுபுறம் மெலடி ரசிகர்கள் ரஹ்மானின் மெலடிகளாக புதுவெள்ளை மழை, கண்ணுக்கு மையழகு, பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ போன்ற பாடல்களின் இனிமையில் முயங்கிக் கிடக்க, இந்த மெலடிகள் எல்லாம் தான் இசையமைத்த "உயிரும் நீயே" பாடலுக்கு கட்டியம் கூற வந்த பாடல்கள் தானேயன்றி  வேறில்லை எனச் சொல்லாமல் சொன்னார் ரஹ்மான்.

முந்தைய பாடல்கள் அவர் மெலடித் திறமைக்கு நிரூபண முத்திரை பதித்திருந்தாலும் இந்தப் பாடல் ரஹ்மானின் மெலடி மகுடத்தில் ஒரு மயிலிறகு.

ஆரம்பத்தில் சுண்டியிழுத்து ஆரம்பிக்கும் பியானோ கிடாரின் கலவை ஆகட்டும், "சாமி தவித்தான்....." என்ற இடத்தில் பெரிதாக மாயஜாலம் காட்டாமல் ஃபில்லர் வேலையை ஜஸ்ட் பியானோவிற்கு மட்டும் தந்தது ஆகட்டும், ரஹ்மான் தன் ஜீனியஸ்'தனத்தை பதினாறு ஆண்டுகளுக்கு முன்னரே நிரூபணம் செய்துவிட்டார். சரணம் முடிந்து "உயிரும் நீயே" என உன்னி ஆரம்பிக்கையில் பின்னணியில் இழைந்தாடும் வயலின் சூப்பர் ஸ்பெஷல் எஃபெக்ட்..

ரஹ்மானைத் தாண்டினால் இந்தப் பாடலில் பளிச்சென்று தெரிபவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். பாடலுக்கு அர்த்தம் தந்து உயிர் தந்தவரல்லவா? சரி, அப்படி என்னதான் பெரிதாய் எழுதிவிட்டார் வைரமுத்து?
உயிரும் நீயே...

உடலும் நீயே...
உணர்வும் நீயே.... தாயே....
இந்த வரிகளை எழுதித் தர உங்களுக்கு பெரும் கவிஞன் யாரும்  தேவையா என்ன?

தன்  உடலில் சுமந்து 

உயிரைப் பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே 
அப்படி என்ன மாயஜால வரிகளா இவை? உடலில் சுமப்பதும் உயிரைப் பகிர்வதும் அம்மா என நம் யாருக்கும் தெரியாதா என்ன எனக் கேட்டால் "இருடா தம்பி, சரணத்தைக் கேள். நான் சொல்ல வந்தது தெரியும்", என்கிறார் வைரமுத்து.

விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான்......
 ...........சாமி தவித்தான்......
தாயைப் படைத்தான் 
தேனி மாவட்டம் தந்த அந்தத் தேனினும் இனிய கவிஞன் கவிப்பேரரசு என கொண்டாடப்படுவதன் காரணம் சொல்ல இந்த ஒரு பாடல் போதும்.

பவித்ரா படத்தில் வரும் இந்தப் பாடலின் ஒலிப்பதிவு முடித்து வெளியே வந்த பாடகர் உன்னிகிருஷ்ணன்  கரம் பற்றிக் கண்ணீர் உகுத்துச்  சொன்னாராம் வைரமுத்து, "இந்தப் பாடலுக்கு நீங்கள் நிச்சயம் தேசிய விருது வாங்குவீர்கள்" என. 

கவிப்பேரரசர் சொன்னபடியே நடந்தது.


உன்னி அவர்கள் தவிர்த்து இப்படியொரு ஜீவனை இந்தப் பாடலுக்கு வேறு யாராலும் தந்திருக்க முடியாது. "சாமி தவித்தான்....." என்னுமிடத்தில் உன்னி அவர்கள் தரும் ஸ்ட்ரெஸ், அடுத்த வார்த்தை பாடுமுன் அவர் வெளிப்படுத்தும் மௌனம்....அப்படியே உயிரைப் பிய்த்து எடுக்கிறது.


யு டியூபில் இந்தப் பாடலைத் தேடும்போது அங்கே இந்தப் பாடலுக்கு இப்படியொரு பின்னூட்டம் கிடைத்தது.

I dedicate this song to my mother and hearing this song my eyes is flooded. thanks to unni for such a nice song to day is my mothers death day
இதைவிட என்ன சொல்ல வேண்டும் நான்?


பாடலுக்கான இணைப்பு இங்கே உங்களுக்காக.

5 comments:

Philosophy Prabhakaran said...

ஏன் திரட்டிகளில் இணைக்கவில்லை... பாடலைக் கேட்டேன்... இந்த பாடல் அதிகம் பிரபலம் ஆகததில் வருத்தம்...

Giri Ramasubramanian said...

நன்றி பிரபா!
இன்ட்லி'யில் இணைத்துவிட்டேன்.

இளங்கோ said...

Nice song.

Unknown said...

அருமையான பாடல்..

"தாரிஸன் " said...

///விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான்......
...........சாமி தவித்தான்......
தாயைப் படைத்தான் //


செம..செம...

Related Posts Plugin for WordPress, Blogger...