Jan 15, 2011

சங்கீத சண்டமாருதம் லலிதா ராமை சந்தித்தேன்!

சிறப்புப் பதிவர்: நட்பாஸ்

கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் இருக்கிற வலைவாசிகள் எவரும் லலிதா ராமைத் தெரியாதவராக இருக்க முடியாது. சமகால இசை விமர்சகர்களில் ஆகச்சிறந்த ஒரு ஆளுமையாக அறியப்படுபவர் இவர். தமிழ் பேப்பரில், " நெருப்பென்று எழுதினாலே படிக்கும்போது விரல் சுட நானென்ன லா.ச.ரா-வா? நேற்றைய கச்சேரியில் கேட்ட சங்கீதத்தை விவரிக்க லா.ச.ரா எழுத்து எனக்குக் கூடி வந்தால்தான் உண்டு," என்று எழுதிய மகானுபவர் லலிதா ராம்.

லலிதா ராமின் எழுத்து என்னையும் உங்களையும் கவர்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை- அவர் இருபெரும் துருவங்கள் இணையும் ஒற்றைப் புள்ளி என்பதை நினைவில் வைத்துக் கொண்டால். ஆமாம், "பசித்தவன் பாலைக் கண்டது போல் உங்கள் எழுத்தை படித்துக் கொண்டே இருக்கிறேன்," என்று சாருவாலும், " ஒரு காலகட்டத்தை கண்ணுக்குக் கொண்டு வந்த எழுத்து"" என்று ஜெமோவாலும் பாராட்டப்பட்டவர் லலிதா ராம். மிஷ்கின் என்ற விபத்தைத் தவிர்த்தால் கலைஞர், புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் போன்ற மாபெரும் ஆளுமைகளுக்கும்கூட இந்த பாக்கியம் வாய்க்கவில்லை என்று நினைக்கிறேன்.

அப்பேற்பட்ட லலிதா ராமை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்? உங்களுக்கு எப்படி இருக்குமோ தெரியாது, நேற்று காலை அவர் புத்தகக் கண்காட்சியில் தன்னை சந்திக்கலாம் என்று என்னிடம் கைபேசியில் சொன்னதும் விதிர்விதிர்த்துப் போய் விட்டேன்- ஒன்றே முக்கால் மணிக்கே அங்கே போனவன், நாலு மணி வரை ஒரு ஆவேசமான மனநிலையில் புத்தகக் கண்காட்சியை பத்திருபது ரவுண்ட் சுற்றி வந்து விட்டு, ஒவ்வொரு ரவுண்டிலும் என் தைரியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து சரியாக நான்கு மணிக்கு நாக் அவுட்டாகி அவரை சந்திக்காமலேயே வீடு திரும்பினேன்.

oo0oo

நான் அத்தனை பயந்திருக்க வேண்டாம். லலிதா ராம் அநியாயத்துக்கு இளைஞராக இருக்கிறார். கர்நாடக இசை விமரிசனம் என்றாலே சுப்புடுதானே நினைவுக்கு வருவார்? அவரளவுக்கு கிழவராக இல்லாவிட்டாலும் ராம் ஒரு நாற்பது வயதையாவது கடந்தவராக இருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், நேரில் பார்க்கும்போதுதான் தெரிந்தது, அவருக்கு என் வயதில் பாதிகூட இருக்காது என்று- கல்லூரி வகுப்பைக் கட் அடித்துவிட்டு சைட் அடிக்கிற பையன் மாதிரி புத்தகக் கண்காட்சி வளாகத்தைச் சுற்றி வருகிறார் இவர். நான் இவரோடு இருந்த அரை மணி நேரத்தில் ஒரு ஐந்து ரவுண்டாவது அடித்திருப்பேன்.

ஆனால் ஒன்று, புத்தகக் கண்காட்சிக்குப் போகிறதானால் நீங்கள் லலிதா ராமைத்தான் துணைக்குக் கூட்டிக் கொண்டு போக வேண்டும்- எல்லாருக்கும் இவரைத் தெரிகிறது, எல்லாரையும் இவரும் தெரிந்து வைத்திருக்கிறார். இது பெரிதில்லை, நம்மையும் எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிற உத்தம குணம் இவருக்கு இருக்கிறது.

இல்லையா பாருங்கள், கிழக்கில் அடர்த்தியாக மீசை வைத்துக் கொண்டு சூமோ வீரர் மாதிரியான உருவத்துடன் "இதை எடுத்து அங்க வையப்பா! அதை எடுத்து இங்கே வையப்பா!" என்று மிரட்டிக் கொண்டிருந்த ஹரன் பிரசன்னாவிடம் என்னை இழுத்துக் கொண்டு போகிறார், லலிதா ராம்- "இவர் யார் தெரிகிறதா?"

ஹரன் பிரசன்னா என்னை பனுவலில் வாய்மொழி காணா உணர்வுகளின் விளிம்பில் உறைந்த விழிவாசல் நிறுத்தி வைத்தார்- இந்த மாதிரி லலிதா ராம் எத்தனை பேரை பிடித்துக் கொண்டு வந்து காட்டியிருப்பாரோ என்னவோ, பாவம். நான் என் கலவரத்தைக் காட்டிக் கொள்ளாமல் ஒரு குறுஞ்சிரித்தேன்- உள்ளே ஒரே உதறல். தன்னைக் கிவிஞர் என்று சொல்லிய ஆள் இவன்தான் என்று ஹரன் பிரசன்னா என்னைக் கண்டு பிடித்து விடுவாரோ என்று நடுக்கம்.

நல்ல வேளை, "இவர்தான் களிமண்கலயம் என்ற பெயரில் ட்விட் பண்றார்," என்றுதான் அறிமுகப்படுத்தினார் லலிதா ராம். ஹரன் பிரசன்னா இறங்கப் பார்த்தவர், ஏறப் பார்க்க மேனக்கிடாமல், "நல்லா டிவிட்டு பண்றீங்க," என்று மையமாகப் பாராட்டிவிட்டு, "ஏ, அதை எடுத்து இங்கே வையப்பா!" என்று தன் வேலையைத் தொடர்ந்தார்.

அங்கே ஆரம்பித்தார் லலிதா ராம், அடுத்து "பா ராகவன் இங்கதான் எங்கேயாவது இருப்பார். உங்களைப் பார்த்தால் ரொம்ப சந்தோஷப்படுவார்," என்று பாராவிடம் அழைத்துப் போக முனைந்தார்- "என்னைப் பாத்தா அவர் எதுக்கு சார் சந்தோஷப்படணும்?" என்று கேட்டால், புதிராக என்னைப் பார்க்கிறார், "என்ன சொல்றே?" என்கிறமாதிரி. நல்ல வேலை பாரா இல்லை, தப்பித்தேன்.

புத்தகக் கண்காட்சியில் இருக்கிற ஒவ்வொரு பெரும்புள்ளியைப் பார்க்கும்போதும் இதே கதைதான்- "அதோ அங்கே முக்தா சீனிவாசன் இருக்கார். அவரோட நீங்க பேசியாகணும்," "நாஞ்சில் நாடன் கிட்ட உங்களை அறிமுகப்படுத்தட்டுமா?', "உயிர்மைல சாரு இல்லாம போயிட்டாரே, இருந்திருந்தா அவர்கிட்ட நாலு வார்த்தை பேசியிருக்கலாம் நீங்க," (சாரு இவருக்கு வேண்டுமானால் ஆயுட்கால ரசிகராக இருக்கலாம், அதற்காக நம்மைப் பார்த்து "யார் மேன் நீ?" என்று கேட்க மாட்டார் என்று என்ன நிச்சயம்?) இப்படியே வழி நெடுக சொல்லிச் சொல்லி முடிவில் என் மனதில் எனக்கே என்னைப் பற்றி ஒரு விஐபி மாதிரியான பிரமிப்பை ஏற்படுத்தி விட்டார் அவர் ("நீங்க ஒரு ரெண்டு நிமிஷமாவது ஞாநிகிட்ட பேசணும்!")

இவ்வளவு நல்லவராக இருக்கிறார், இவரா கர்நாடக சங்கீதம் என்று வந்தால் அந்த போடு போடுகிறார், இவரா லாண்டிங் நோட்ஸ் விஷயத்தில் ஜெயமோகனையே பதம் பார்த்தார் என்று உள்ளூர வியந்தபடி அவருடன் பேசிக் கொண்டு வந்தேன், என் சந்தேகத்தை வழியில் நடந்த இரண்டு நிகழ்வுகள் போக்கின.

முதல் நிகழ்வு: என் கையில் கம்ப ராமாயணம் இருப்பதைப் பார்த்ததும் (அதை ஏன் வாங்கினேன் என்பதைக் கடைசியில் சொல்கிறேன்), "கம்ப ராமாயண உரை என்றால் ஆகச் சிறந்த உரை வை மு..." என்று ஆரம்பித்தார் அவர்.

"கோதைநாயகியா?" என்று ஆர்வக் கோளாறில் உளறி விட்டேன்- உளறினது அவரது பதிலைக் கேட்டதும்தான் புரிந்தது.

"இல்லை இல்லை, வை மு ராமசாமியோ கந்தசாமியோ யாரோ ஒருத்தர் எழுதினது- யூ நோ வாட் ஐ மீன்!" என்று கூர்நகம் மெல்ல வெளிப்பட்டது.

"ஆகா, நாம கோயிஞ்சாமின்னு தெரிந்து போச்சுடா!" என்று பல்பை சத்தமில்லாமல் வாங்கி என் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டேன்.

இரண்டாவது நிகழ்வு: இது எனது மிக நுட்பமான அவதானிப்பு- ஒரு இடத்தில் லலிதா ராமைக் கண்டதும் ஒல்லியான உருவம் கொண்ட ஒருவர் முகம் வெளிறி, முட்டி மடங்கி அவசர அவசரமாக ஒரு ஸ்டாலுக்குள் பதுங்கினார்- "கர்நாடக இசையில் ஸ்ருதியுடன் பாடுபவர்கள் குறைச்சல் என்று சொன்னால் நிறைய பேருக்கு கோபம் வருகிறது. அப்படிச் சொல்ல, தீவிர கர்நாடக சங்கீத ரசிகனான எனக்கும்தான் வலிக்கிறது. ஆனாலும், எவ்வளவு நாள்தான் denial-ல் வாழ்வது?" என்று லலிதா ராமால் மணி கட்டப்பட்ட பூனைகளில் ஒருவராக அவர் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்த இளம் வயதில் இவ்வளவு தன்னம்பிக்கையும் தீவிரமான விமரிசனப்பார்வையும் ஒருவருக்கு இருப்பது ஒரு ஆச்சரியம் என்றால், இசை தவிர மற்ற விஷயங்களில், குறிப்பாக நமது புகழ் மற்றும் அறிவுக்கூர்மையில் இவர் வைத்திருக்கிற அபரிதமான நம்பிக்கையைப் பற்றி எழுத வேண்டுமானால் நானும் லா.சா.ராவைத்தான் கூட்டிக் கொண்டு வர வேண்டும்.

எதற்கும் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: முன்னே பின்னே நீங்கள் பேசியிராத ஒருவர் உங்களை அழைத்து, "நான் யார் பேசுகிறேன் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!" என்று நாலு சான்ஸ்- சரியாக நோட் பண்ணிக் கொள்ளுங்கள்- நாலு சான்ஸ் கொடுத்தால் உடனே கண்ணை மூடிக் கொண்டு லலிதா ராம் என்று சொல்லி விடுங்கள்.

oo0oo

நான் இந்தப் புத்தகக் கண்காட்சியில் கம்ப ராமாயணத்தை ஏன் வாங்கினேன் என்று கடைசியில் சொல்கிறேன் என்று எழுதினேன் இல்லையா? அதுகூட லலிதா ராமுக்காகத்தான்.

அவர் கர்நாடக இசை குறித்து மட்டுமின்றி விளையாட்டு குறித்தும் எழுத "கிரிக்கெட் தவிர" என்ற ப்ளாக் வைத்திருக்கிறார். வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பந்தயங்கள் குறித்து அதில் எழுதும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். நமது நண்பர் கிரி இங்கு எழுதவிருக்கிறார் என்பது உங்களுக்கு இனிப்பான செய்தி.

லலிதா ராம், ஸஸரிரி கிரி- ரெண்டு பேருமே வெயிட்டான கைகள். இவர்கள் முன் தாக்குப் பிடிக்க நம்மால் ஆகுமா? பார்த்தேன், இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் கம்ப ராமாயணத்தைக் கரைத்துக் குடித்திருப்பதாகத் தெரிந்தது. நாமும் அதிலிருந்து கொஞ்சம் போல உருவி விட வசதியாக அவசரப் போலீஸ் கம்பரைக் கையில் வைத்துக் கொள்ள உத்தேசம்.

"உள்ள நீர் எல்லாம் மாறி, உதிர நீர் ஒழுக, நின்றான்" என்று நடாலின் தோல்வி குறித்த வர்ணனைகளுடன் செவ்வியல் இலக்கியத்தின் கூறுகள் கொண்ட உயர்தர பதிவுகள் வெகு விரைவில் கிரிக்கெட் தவிர என்ற தளத்தில் வரவிருக்கின்றன. நீங்கள் அனைவரும் அதை அங்கு வந்து வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்- சாருவும் ஜெமோவும் என்னை இந்த ஜன்மத்தில் பாராட்டப் போவதில்லை: நீங்களாவது வந்து பாராட்டினால் கொஞ்சம் கெத்தாக இருக்குமில்லையா?



2 comments:

natbas said...

நல்ல பதிவு. நன்றி கிரி.

Saravanan / C Subramanian said...

"சாருவும் ஜெமோவும் என்னை இந்த ஜன்மத்தில் பாராட்டப் போவதில்லை"

who knows? they might...

nice article abt Lalitharam. superb.

Related Posts Plugin for WordPress, Blogger...