Feb 21, 2011

இசைக் கோலங்கள் - மலேசியா வாசுதேவன் நினைவாக...

படம் நன்றி: ரேடியோஸ்பதி 

நான் ஏதேதோ எழுதுகிறேன். ஆனால் அவையெல்லாம் நான் எழுத வந்தவையல்ல.

நீங்கள் ஏதேனும் கல்யாண ரிசப்ஷனுக்குச் செல்லுங்கள். மெல்லிசைக் கச்சேரி இருக்கிறதா? ஆம் இருக்கிறது. அவர்களுக்கு என்று ஒரு வரிசைக்கிரமம் இருக்கும். பக்திப் பாடல், லேட்டஸ்ட் மெலடி, கொஞ்சம் பழைய கல்யாணப் பாடல், லேட்டஸ்ட் ஃபாஸ்ட் நம்பர், மீண்டும் இடைக்கால மெலடி ஒன்று, பின்னர் கச்சேரியின் கடைசி கட்டங்களில் வேகப் பாடல்கள் என.

அதில் அவர்களுக்கு என இருபத்தைந்து முப்பது பாடல்கள் கொண்ட ஒரு ஸ்டாண்டர்ட் லிஸ்ட் ஒன்று இருக்கும். அந்தப் பாடல்களை பாட, இசைக்க என அந்த குழுவில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அவற்றிலிருந்து பத்து பாடல்களை நீங்கள் எந்த கல்யாண ரிசப்ஷன் என்றாலும் கேட்கலாம். 

அந்த லிஸ்டில் எந்தப் பாடலைப் பாடினாலும் சரி, அல்லது எந்தப் பாடலை ஒதுக்கினாலும் சரி....ஒரேயொரு பாடல் மாத்திரம் எல்லா கச்சேரிகளிலும் கட்டாயம் நீங்கள் கேட்பீர்கள் . அது என்ன பாட்டு என உங்களால் சொல்ல முடியுமா? உங்களிடம் விடையில்லை என்றால் நானே அதைக் கடைசியில் சொல்கிறேன்.

லேசியா வாசுதேவன் அவர்கள் பற்றி என் நினைவுகளை வருடினால் காலச் சக்கரம் முன்னும் பின்னுமாகச் சுற்றி ஏதேதோ நினைவுகளில் ஊசலாடுகிறது.

"பூவே.....இளைய பூவே...." பாடலின் கம்பீரம், "ஒரு கூட்டுக் குயிலாக" பாடலில் தெறிக்கும் அன்பு, "முதல் மரியாதை" படத்தில் நடிகர் திலகத்திற்கு அவர் தொடுத்த இதமான, நையாண்டித்தனமான, ரொமான்சான  விதவிதமான பாடல்கள், அதிசயபிறவியில் ரஜினிக்கு அவர் கட்டிய தோரணங்கள், எஜமான் படத்தின் "தூக்குச்சட்டி" பாடலில் ரஜினி, கவுண்டமணி என இருவருக்கும் அவர் இருகுரலில் பாடினது  என அவர் பாடிய பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

"ஓ,,,, பார்ட்டி நல்ல பார்ட்டிதான்" ஒரு நல்ல மெலோடியஸ் கில்மா பாடல் பாடுவது எப்படி என்பதற்கு அடுத்த தலைமுறைக்கு ஒரு பாடம்.

தர்மயுத்தம் படத்தின் தங்கைப்பாடல் "ஒரு தங்க ரதத்தில்" நம்முள் இருக்கும் அந்த அன்பான அண்ணனை ரஜினி வடிவில் நம் கண்முன் கொணர்கிறது.

டி.எம்.எஸ்.'சுக்கு அப்புறம் சிவாஜிக்குப் பொருத்தமான குரல் மலேசியா சார் குரல்தான்  என இதுவரை ஒரு நூறுபேர் சொல்லக் கேட்டிருப்பேன்.

ரஹ்மானுக்கு அவர் பாடிய "தென் கிழக்குச் சீமையில" எப்படிப்பட்டவனையும் கரைய வைக்கும்.

"கதாநாயகன்" படத்தில் அவர் ஏற்ற காமெடி வில்லன் ரோல் எப்படிப் பட்டவரையும் சிரிக்க வைக்கும்.

இப்படிப் போய்க்கொண்டே இருக்கிறது என் எண்ணத்தில் தோன்றும் மலேசியா அவர்களின் நினைவுகள்.

நான் ஏதேதோ எழுதுகிறேன் என முதலில் சொன்னேன் இல்லையா அதற்குக் காரணம் நான் இங்கே விவரிக்கப் போகும் ஒரு சம்பவம் அல்லது அனுபவம்.

ந்த நண்பரின் பெயர் எனக்கு இப்போது நினைவில் இல்லை. அவர் அஸ்ஸாமைச் சேர்ந்தவர். 2006 ஆம் ஆண்டு விஜய் டி.வி. சூப்பர் சிங்கரில் கோவையில் முதல் இரு சுற்றுக்கள் கலந்து கொண்டுவிட்டு மேற்கொண்டு சுற்றுகளில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தார்.

ஆரம்ப ரவுண்டுகளில் அவர் பெயர் பரபரப்பாக அடிபட ஆரம்பித்தது. சென்னை சின்மயா சென்டரில் உள்ள ஆடிட்டோரியத்தில் மூன்றாம் சுற்று பதிவுகள் நடந்து கொண்டிருந்த போது அவரை நான் அங்கே பார்த்தேன். அவர் கலந்து கொண்டபோது அவருக்கு மலேசியா அவர்கள் நடுவராக இருந்தார். எங்கள் தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டோம். நான்காம் சுற்றில் வெளியேறி அவர் அஸ்ஸாம் திரும்பினார்.

சில மாதங்கள் கழித்து அந்த நண்பர் என்னை அழைத்திருந்தார்.

"கிரி, நான் மலேசியா வாசுதேவன் சார் நம்பர் கலெக்ட் பண்ணி வெச்சிருந்தேன். மிஸ் பண்ணிட்டேன். எப்படியாவது யாரையாவது புடிச்சி வாங்கித் தர முடியுமா. அவர் ஒரு அற்புதமான மனிதர்.  நான் அடுத்த மாசம் சென்னை வர்றேன். அவரை சந்திக்க விருப்பமா இருக்கு. ரொம்ப எளிமையான நம்மைப் போல பார்டிசிபன்ட்கள் கிட்ட கூட ரொம்ப எளிமையா பழகினார், நான் சூப்பர் சிங்கர் போல நிறைய போட்டிகள்'ல கல்கத்தாவுக்கு எல்லாம் போயி பாடியிருக்கேன். அங்கயும் சரி, உங்க சென்னை'ல இருக்கற மத்த நடுவர்கள்'லயும் சரி மலேசியா போல ஒருத்தரை பார்க்க முடியாது சார். தோத்துப் போனவங்களுக்கு அவர் சொன்ன அட்வைஸ் சும்மா சால்ஜாப்பு போல இல்லாம, நிஜமாவே அடுத்த முறை அவங்க இங்க வந்து பாடணும் அப்படின்ற மாதிரி இருந்துச்சு. அவரைப் போல் ஒரு ஜெம் ஆஃப் தி பர்ஸனை இந்த லோகத்துல பார்க்கறது ரொம்ப கஷ்டம்".

ஒரு தனி மனிதனின் தனித் திறமையை உலகம் வியப்பது, ஆராதிப்பது என்பது காலகாலமாக பலதுறைகளில் பலருக்கும் நிகழ்ந்து வருவது. கலையம்சம் சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்வது, அதில் சிறந்து விளங்குவது, உலகப் புகழ் பெறுவது, மனிதர்களின் மாறா அன்பைப் பெறுவது என்பவற்றைக் காட்டிலும் எனக்கென்னவோ இது போன்ற நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு ரசிகனின் இதயத்தில் ஒருவர் அவரது இயல்பான செயல்பாடுகள் மூலம் பெரும் இடம் உன்னதம் பெற்றதாகத் தெரிகிறது.

ஒரு உன்னதக் கலைஞனின் இழப்பு தேற்ற முடியாத ஒரு சோகம். ஒரு அற்புதமான மனிதனின் மறைவு எவ்வகையிலும் ஈடு செய்ய இயலாத ஒரு வெற்றிடம்.


மலேசியா அவர்கள் நினைவாக அவர் பாடிய ஒரு அரிதான மெலடி இங்கே:




அந்தப் பாடல்: "ஆசை நூறுவகை வாழ்வில் நூறுசுவை"
.
.
.

3 comments:

Unknown said...

அன்னாருக்கு எமது அஞ்சலிகள்..

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
மலேசியா வாசுதேவன் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ம.தி.சுதா said...

மனதை கனக்க வைத்தப் போனவர்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தழிழனால் முடிந்தது (இலகு தட்டச்சு உதவி)

Related Posts Plugin for WordPress, Blogger...