Feb 15, 2011

பெங்களூரிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்

சிறப்புப் பதிவர்: சங்கர கண்ணன்

நட்சத்திரப் பட்டாளங்களுடன் அதகளம் செய்து கொண்டிருக்கும் இந்திய அணிக்கும்  தோல்விகளின் பிடியில் இருந்து மீண்டு வந்திருந்த ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே பெங்களூருவில் நடந்த "பயிற்சி ஆட்டம்" என்று அழைக்கப்பட்ட அந்த ஆட்டம் காண்பதற்கு சென்னையிலிருந்து சென்று வந்தேன். அந்த இனிய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

ஏக எதிர்பார்ப்புகளுடன் ஞாயித்துக்கிழமை ஆட்டம் காண சென்னையிலிருந்து சனிக்கிழமை காலையே பிருந்தாவனில் புறப்பட்டேன். என் எதிர்பார்ப்புகளில், அவற்றைக் கனவுகள் எனவும் சொல்லலாம், மிக முக்கியமானது லாங் ஆனில் சேவாக் அடிக்கும் ஒரு ஃப்ளாட் சிக்ஸ், அந்தப் பந்து நேரே வந்து என் கையைப் பதம் பார்த்து அதனால் ஏற்படும் ஆனந்த வலி. கனவு கலைந்து எழுந்தால் "கிருஷ்ணராஜபுரம்" கடந்திருந்தது. ஒருமணி சுமாருக்கு பெங்களூரு அந்த நேரத்திலும் இளம் குளிருடன் வரவேற்றது. வெளியில் வந்ததும்தான் வெயிலின் சுவடு தெரிந்தது. 

ஆட்டத்திற்கான டிக்கெட்டை இன்டர்நெட்டில் பதிவு செய்ததால், அதை ஒரிஜினல் டிக்கெட்டாக மாற்றிக் கொள்ள ஒரு ஆட்டோ அமர்த்திக்கொண்டு சின்னசாமி ஸ்டேடியத்தை அடைந்தேன். டிக்கெட்டின் விலை இருநூற்று ஐம்பது ரூபாய். ஒரு பயிற்சி ஆட்டத்திற்கு இது ரொம்பவே அதிகம் என நீங்கள் நினைத்தால், இன்னும் கேளுங்கள். அங்கே குறைந்தபட்ச டிக்கெட்டே அந்த விலைதான். சச்சின், சேவாக், யுவராஜ்கள் எல்லாம் உலகின் தலைசிறந்த ஒரு அணியுடன் மோதுவதைக் காண இது ஒன்றும் பெரிதில்லை என நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ள வேண்டியதுதான்.
சின்னசாமி ஸ்டேடியத்தில்தான் என்னே ஒரு ஏற்பாடு! இன்டர்நெட் டிக்கெட்டை மாற்றிக் கொள்ள கால்கடுக்க ஒரு மணிநேரம் நிற்க வைத்தார்கள். எனினும் பெங்களூருவில் இந்தியா சார்ந்த வேறு முக்கிய ஆட்டங்கள் ஏதும் இந்த உலகக்கோப்பை அட்டவணையில் இல்லாதது (கல்கத்தாவிலிருந்து மாற்றியமைக்கப்பட இங்கிலாந்து ஆட்டம் தவிர்த்து) அந்தக் காத்திருப்பிற்குப் பின் இருந்த முக்கியத்துவம் என எங்களில் பலர் உணர்ந்தோம். அந்த நீண்ட காத்திருப்பிற்குப் பின் என் கைகளில் ஆட்டத்திற்கான டிக்கெட் தவழ்ந்த அந்த வினாடி ஏதோ அமெரிக்கா செல்ல விசாவே எனக்குக் கிடைத்தது போல் உணர்ந்தேன்.

ஞாயிறன்று மதியம் ஒரு மணிக்கே அரங்கத்தை வந்தடைந்தேன். அரங்கம் உள்ளும் புறமும் மக்களால் நிரம்பி வழிந்தது. எங்கெங்கு காணினும் இந்திய தேசிய கோடி பட்டொளி வீசிப் பறந்தது. பலர் முகத்தில் மூவர்ணக் கலவையில் பெயின்ட் செய்த இந்தியக் கொடி மினுமினுத்தது. விசில்களின் உற்சாகக் கூக்குரல்களையும், பாரத் மாதாகி ஜே கோஷங்களையும் இன்னமும் என் காதுகள் மறுபடி மறுபடி ஒலிபரப்பிக் கொண்டிருக்கின்றன. இப்படி அப்படி எனச் சொல்லாத வண்ணம் இருந்தன பாதுகாப்பு ஏற்பாடுகள். நான் கொண்டு சென்ற தயிர்சாத பாக்கெட் கூட பிடுங்கி வீசப்பட்டது. அடப்பாவிகளா சச்சினுக்கு அப்புறம் இந்த உலகத்துல எனக்குப் பிடிச்ச ரெண்டாவது விஷயம் அதுதாண்டா என சொல்லியும் பயனில்லை. "போ போ, உள்ள போயி சச்சினைப் பாரு" என்று வலுக்கட்டாயமாக உள்ளே தள்ளப்பட்டேன். அரங்கினுள்ளே உண்டு, பருகி, உறங்கி என எல்லாமும் செய்ய கிரிக்கெட் இருக்கிறது என அவர்கள் நினைத்தார்களோ என்னமோ? 

சரி, சச்சினும் சேவாகும் பேட் செய்ய வீர நடை போட்டு வரப்போகிறார்கள் எனும் என் எண்ணம் என் வாழ்வின் இரண்டாவது அத்தியாவசியத்தை மறக்கச் செய்தது. இப்போது என் தேவை நான் டிக்கெட் வாங்கிய "ஏ" ஸ்டாண்டில் ஆட்டத்தைக் கண்டு ரசிக்க ஒரு "ஏ கிளாஸ்" இருக்கை. ஒரு அருமையான இடத்தில் கிடைத்தது ஆசனம். அடடே பக்கத்தில் பார்த்தால் அழகுத் தமிழ் பேசும் ஒரு நண்பர். ஓரிரு நிமிடங்களிலேயே நாங்களிருவரும் சினேகிதமாகிவிட்டோம். பிறகென்னா நமக்குப் பேசக் கற்றா தரவேண்டும் பேட்டிங் லைன்-அப், வெதர் கண்டிஷன், பெங்களூருவில் இந்திய அணியின் சாதனைகள் என எங்களுக்குப் பேச ஆயிரம் விஷயங்கள் இருந்தன 

ஒரு மணியிலிருந்தே மக்கள் திரள்திரளாக அரங்கினுள் வந்து கொண்டிருந்தனர். சுமார் இரண்டு மணியளவில் ஒரு பாதி அரங்கம் நிறைந்திருந்தது. டாஸ் போடுமுன் நிகழ்ந்த இரு அணி வீரர்களின் பயிற்சியை குறித்து இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும். முதலில் ஆஸ்திரேலிய அணியினர் மஞ்சள் உடையில் ஜம்மென வந்து சேர்ந்தார்கள். ஸ்ட்ரெச் பயிற்சிகள், ஹை கேட்ச்கள், ஸ்லிப் கேச்கள் வந்தவுடன் அவர்கள் தீவிரமாக இறங்கிவிட்டனர். 

பிரெட் லீயும் ஜான்சனும் பயிற்சியின் போதே வீசிய அனாயாச வேகப்பந்துகளைக் காண ஆயிரம் கண் வேண்டும். ஜான்சன் அங்கு பயிற்சியில் இருந்தவர்களில் க்விக் அண்ட் ஸ்மார்ட் ஆக இருந்தார். ஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலிய ஃபீல்டர்களுக்குத் தந்த ஸ்லிப் கேச் பயிற்சிகள் "சூப்பரோ சூப்பர்".

பலத்த ஆரவாரங்களுக்கிடையே இந்திய அணி சிகப்பு ஜெர்சிகளில் நுழைந்தது. இந்திய அணியின் பயிற்சி பெரும்பாலும் பேட்டிங் சார்ந்தே இருந்தது எனலாம். பேட்டிங் பயிற்சி முடித்துவிட்டு சச்சின் ஒரு ஸ்டான்ட் வழியாக உள்ளே நுழைந்தபோது எழுந்த ரசிகர்களின் பெரும் ஆரவாரம் ஆயிரம் சிங்கங்கள் எழுப்பிய ஒலியை ஒத்தது. பயிற்சியின் போது சச்சின் மிகவும் முனைப்புடன் செயற்பட்டது அவர் பேட்டிங்கை ஓபன் செய்ய வந்து முதல் ஓவரை அவர் எதிர்கொள்வது பற்றின எதிர்பார்ப்பையும் ஆவலையும் ரசிகர்கிடையே மென்மேலும் தூண்டியது.

டாஸ்:

நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு தோனி டாஸ் ஜெயிப்பதைப் பார்க்கிறேன். எங்கள் எதிர்பார்ப்பை ஏதும் வீணடிக்காமல் அவர் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். பயிற்சி ஆட்டம் என்பதால் இரு அணிகளும் தங்கள் பதினைந்து வீரர்களையும் சுழல் முறையில் பயன்படுத்த ஒப்புக் கொண்டன.

வர்ணனையாளர் ஒருவர் இந்தியா பேட் செய்யப்போவதாக அறிவித்தபோது அரங்கமே ஒரு எழுச்சியுடன் வண்ணமயமாக இருந்ததை அங்கிருந்த ஜயன்ட் டி.வி. ஸ்க்ரீன் ஒன்று பிரதிபலித்தது. பல வண்ணமய மாற்றங்களுடன் உலகக்கோப்பை தொடங்கிவிட்டது என்பதை அந்தக் காட்சி நிரூபித்தது.

இந்திய பேட்டிங்:

இந்திய அணியின் ஒபனர்கள் மைதானத்தில் நுழைந்த வேளையில் முழு அரங்கமும் ஆரவாரமும் உற்சாகமும் பொங்க "இந்தியா இந்தியா, சச்சின் சச்சின்" என மந்திர உச்சாடனத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. எனினும் எங்கள் அனைவருக்கும் சற்றே, சற்றே என்ன சற்றே...மிகவும் அதிகமாகவே, உற்சாக இழப்பை அளிக்கும் வண்ணம் சேவாகுடன், கவுட்டியைக் கண்டோம். எந்திரன் பார்க்கப் போன தியேட்டரில் "வீராசாமி" திரையிட்டால் எப்படியிருக்கும்? அப்படித்தான் ஆகிப்போனது அங்கே பலருக்கு. சரி சச்சின் இரண்டாம் விக்கெட்டிற்கு வருவார் போல என சமாதானம் செய்து கொண்டோம்.

கம்பீர் தொடக்கத்திலேயே பிரெட் லீயின் வேகத்தையும் டொவ்கியின் ஸ்விங்'குகளையும் சந்திக்கத் தடுமாறிக் கொண்டிருந்தார். எனினும், மறுபுறம் வீரூ தன் வழக்கமான விளாசல்களால் அதகளம் செய்து கொண்டிருந்தார். பிரெட் லீயின் புல் டாஸ் ஒன்றில் ஒரு அட்டகாசமான கவர் டிரைவ் மூலம் தன் ரன்களின் கணக்கைத் துவங்கினார் வீரு.

தன் இன்னிங்க்ஸ் முழுவதும் மிகவும் நிதானமும் அமைதியுமாக இருந்த கம்பீர்  போலிஞ்சரின் அவேயில் சென்ற பந்தை தானே சென்று அதேபோல் அவேயில் ஆடி வைட்'டிடம் ஸ்லிப்பில் சரணாகதியடைந்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த வீராத் கோலி மிக எளிதாக செட்டில் ஆனார். டவ்கி பந்தில் அவர் அடித்த ஒரு சூப்பர்ப் ஸ்ட்ரைட் டிரைவ் கண்களில் ஒத்திக் கொள்ளலாம் போலிருந்தது. அங்கே "ஷீட் ஆங்கர்" ரோலை எடுத்துக் கொண்ட பக்குவத்தில் தன் ஆட்டத்தை மாற்றியமைத்துக் கொண்டார் வீரு. அடிதடி அதகளங்களை ஓரத்தில் வைத்தாலும் சரியான பந்துகளை அவர் பவுண்டரிக்கு விரட்டத் தயங்கவில்லை. ஜேசன் கிரேஜா  பந்துவீச வந்தபோது அவருக்கு பேட்டிங்கின் பல நுணுக்கங்களை மறுமுனையிலிருந்து சேவாக் கற்றுத் தந்தார் என்றால் அது மிகையாகாது. ஸ்க்வார் கட், ஸ்க்வார் டிரைவ், லேட் கட் என எல்லாமுமே அதில் அடங்கும். வீரு, கோலி பார்ட்னர்ஷிப் சரியாக செட்டில் ஆன வேளையில் புதுமுக ஹேஸ்டிங்க்ஸ் பந்தில் தூக்கியடித்து கவர் திசையில் ஹசியிடம் கேச் தந்து வெளியேறினார் கோலி.

அடுத்து யுவி உள் நுழைந்தார். சாய்ந்து சரிந்த தன் பேட்டிங் ஃபார்மை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு ஒரு கண்ணியமான துவக்கத்தையே தர அவர் நினைத்தாலும் கூடிய விரைவில் ஜான்சன் புண்ணியத்தில் அவருக்கு இறுதியாத்திரை இசை முழங்கியது. விக்கெட் கீப்பர் பெயின் யுவராஜ் அடித்த ஷார்ட் பாலை அமுக்கிப் புடி என பிடித்தபோது ரசிகர்கள் மனத்திலும் பெயின் புகுந்தது.

எம்.எஸ். தோனி வழக்கம்போல் வீர தீரமாக உள்ளே நுழைந்தார். அவர் விளையாடத் துவங்குமுன்னரே அவரைத் தொடர்ந்து வரும் விதி எனும் பேட்டிங் ஃபார்ம் அவருடன் ஹேஸ்டிங் ரூபத்தில் விளையாடி அவரையும் வழியனுப்பி வைத்தது. விடுவேனா பார் என வீரு மறு முனையில் சோலோ சங்கீதம் இசைத்துக் கொண்டிருந்தது மட்டுமே சற்று ஆறுதல்.

ராபிட் ரெய்னாவும் வீருவின் ஐம்பதும்:

ரெய்னாவின் சமீபத்தைய சொதப்பல்கள் ரசிகர்கள் மனதில் ஒரு நம்பிக்கையின்மையை விதைத்திருந்தாலும் இந்திய மண்ணில் அவருடைய பேட்டிங் பலம் வீண் போகாது எனும் நம்பிக்கையும் வீருவுடன் அவர் கைகோர்த்து நல்லிசை பாடுவார் எனும் நம்பிக்கையும் எல்லோர் மனத்திலும் இருந்தது.

வீரு அரை சதத்தை நெருங்கிய போதே அரங்கினில் ஒரே உற்சாகக் கரை புரளல்கள் நேர்ந்தன. அவர் தனக்கேயுரிய பாணியில் க்ரேஜா பந்தில் லாங் ஆப்பில் சிக்ஸ் அடித்து அரை சதத்தை எட்டிய போது ஒட்டு மொத்த அரங்கமும் எழுந்து நின்று ஆர்ப்பரித்து டி.ஜே.யின் இசைக்கு ஏற்ப நடனங்களாடி "வீரு வீரு"  என கோஷமிட்டது. அந்தக் கோஷங்கள் அடங்குமுன்னமே வீரு போல்டாகிப் போக ஒட்டு மொத்த அரங்கமும் "சைலன்ட்" மோடிற்கு வந்தது. வீரு வெளியேற மீண்டும் ஆரவார கோஷங்கள் முழங்க தன் அதியற்புத ஒருநாள் ஆட்டம் ஒன்றை சமீபத்தில் சந்தித்த யூசுப் பதான் உள்நுழைந்தார். 

இப்போது ரெய்னா....மீண்டும் ஒரு விக்கெட். பிரெட் லீயின் அனுபவ ஷார்ட் பால் ஒன்றுக்கு ரெய்னா அடிபணிய, விக்கெட் கீப்பர் பெயின் எளிமையான கேட்சிங் பிரக்டீசில் ரெய்னா வெளியேறினார்.

பெயின் (Paine)ஆஸ்திரேலியாவின் பேக்-அப் கீப்பர் என்பது இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம். 

லீயின் நர்த்தனங்கள்:

தன் வழக்கமான அதிரடி ஆட்டங்களை ஓரங்கட்டிவிட்டு யூசுப் பதான் ஹர்பஜனுடன் இணைந்து நிதான ஆட்டத்தை சிறிது நேரம் ஆடினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியில் உள்ளே-வெளியே ஆடிக் கொண்டிருந்த பிரெட் லீ இந்தப் போட்டியில் புயல் வேகத்தில் பந்து வீசி இந்திய அணியை அசரடித்தார். அடுத்தடுத்து அவர் ஹர்பஜனையும், பியூஷ் சாவ்லாவையும் நூற்று நாற்பது கி.மீ.வேகத்தில் யார்க்கர்களை வீசி பெவிலியனுக்கு அனுப்பினார்.

யூசுப் - அஸ்வின் ஜோடி

138 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தது இந்திய அணி. பார்வையாளர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பு நூற்று ஐம்பது ரன்கள். எப்போதும் நம் எதிர்பார்ப்பை சிதறடிப்பவர்கள்தானே நம்மவர்கள். இங்கும் அதுவே நேர்ந்தது. அஸ்வினுடன் யூசுப் இணைந்து ஆடிய நுட்பமான ஆட்டம் சரிவிலிருந்த இந்திய அணியை சற்றே மீட்டது. எனினும் ஓரளவிற்கு மேல் யூசூப் தன் நிலையைக் கட்டுப்படுத்தாது பார்ட் டைம் பவுலர் டேவிட் ஹசியிடம் தன் விக்கெட்டை இழந்தார். அவர் விக்கெட் விழுமுன் அதே ஹசி பந்தில் மிட் விக்கெட் திசையிலும், ஸ்ட்ரெயிட்டிலும்  மக்களின் "வீ வான்ட் சிக்சர்" கோஷங்களுக்குப் பதிலாக "வாங்கிக்கோ இந்தா" என இரண்டு சிக்சர்களை விளாசிவிட்டுச் செல்ல அவர் தவறவில்லை.

ஆஸ்திரேலியாவை வெறுப்பேற்றிய வால்பையன்கள் 

ஆஸ்திரேலியர்கள் இந்திய இன்னிங்க்சை பண்டல் கட்டிவிட்டார்கள் என எண்ணிய வேளையில் நெஹ்ரா அஸ்வினுடன் இணைந்தார். "அண்ணே உங்களுக்கு பேட் புடிக்கத் தெரியுமா?" என மக்கள் நக்கலடிக்கத் தொடங்கிய போது.... "தம்பிகளா, நம்ம ஆட்டத்தைப் பாருங்க" என நெஹ்ரா நிதானமாக இயல்பாக ஆடி ரன்களை உயர்த்தினர். மூன்று பவுண்டரிகள் உட்பட நெஹ்ரா சேர்த்த பத்தொன்பது ரன்கள் மற்றும் அஸ்வின் சேர்த்த கால்சத ரன்கள் புண்ணியத்தில் இந்திய சொல்லிக் கொள்ளும்படியில்லை என்றாலும் "வாங்க ராசா, ஒரு முப்பது ஓவராவது போடலாம்" என கேப்டன் சொல்லிக் கொள்ளும்படிக்கு 214 ரன்களைச் சேர்த்தனர்.

(மேலும்)

1 comment:

natbas said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கார் நண்பர் சங்கர் கண்ணன்...

விறுவிறுப்பாக எழுதுகிறார். தொடர்ந்து அவர் இங்கு எழுத வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...