Apr 9, 2011

மாப்பிள்ளை - திரை விமர்சனம்



கல்லூரியில் படிப்பதற்காக தன் அழகான சிறுநகர வாழ்க்கையைத் துறந்து கதாநாயகி பட்டினத்தில் தஞ்சம் புகுகிறாள். அந்த மாநகரிலும் மற்றும் தன் ஹாஸ்டலிலும் அவள் சந்திக்கும் கலாச்சார ரீதியான வேறுபாடுகள் , நிகழ்வுகள் அவளுக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சிகள் அவளை மீண்டும் தன் சிறுநகருக்கே திரும்பும் முடிவை எடுக்க வைக்கிறது. அந்த வேளையில் அவள் கதாநாயகனைச் சந்திக்க, ஊர் திரும்பும் தன் முடிவை மாற்றிக் கொள்கிறாள்.

நகரத்து நாகரீகங்களை கதாநாயகன் கதாநாயகிக்கு அறிமுகம் செய்கிறான். நடை, உடை, பாவனை என எல்லாமும் மாறிப்போக தான் ஒரு முழு பட்டினத்துப் பைங்கிளி ஆகிப் போகிறாள் நாயகி. அவ்வாறு வாழ்வதை அனுபவித்து ரசிக்கவும் அவள் துவங்கும் வேளையில் பண்டிகை விடுமுறைகள் வந்து சேர, ஊரில் இருக்கும் தன் நீண்ட நாள் தோழனின் நினைவுகள் கதாநாயகனின் நினைவுகளுடன் சேர்ந்து நாயகியைக் குழப்பி அலைக் கழிக்க ஆரம்பிக்கின்றன.

நாயகனுக்கு பண்டிகைக் காலத்தைச் செலவிட நண்பர் உறவினர் என்று வேறு யாரும் இல்லாத நிலையில், நாயகி அவனைத் தன் ஊருக்கு அழைத்துப் போகிறாள். அங்கே அவள் பெற்றோரும் பெரியோரும் அவளது நவநாகரீக மாற்றத்தைக் கண்டு வியக்க, நாயகனின் வருகையும் ஊரில் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்துகிறது.

ஒரு சுபயோகசுபதினத்தில் தான் நாயகியை மணக்க இருப்பதாக நாயகன் அவளது நீண்டநாள் தோழனிடம் சொல்ல, நாயகனின் மூக்கு உடைபடுகிறது. நாயகியின் தந்தையும் அவர்களிடையேயான உறவு திருமணத்தில் முடிவதை விரும்பவில்லை. இது இப்படிச் செல்ல, நாயகன் அந்த சிறு நகரத்து நிலங்கள், விவசாயம் ஆகியவற்றின் மீது ஈடுபாடு காட்டத் துவங்குகிறான்.

"நூ வொஸ்தாவன்ட்டே நேனொத்தன்டானா" கதையாக பட்டினத்து நாயகன், கிராமத்துத் தந்தை, விவசாயம், அது இது என கதை நீள்கிறது. கிராமத்தில் நாயக - நாயகியிடையே வருவதற்கு என்றே ஒரு இளம்பெண் அறிமுகம் ஆகிறாள். நாயகன் மற்றும் அந்தப் பெண்ணிடையே ஏதோ உறவு மலர்வதாக  ஒரு நாடகம் உருவாக... நாயகன்-நாயகயிடையே லடாய், கலாட்டாக்கள் என கதை நகர்ந்து, நாயகியின் தந்தை மனதை எப்படி நாயகன் மாற்றுகிறான், நாயகி நாயகனைப் புரிந்து கொண்டாளா என்பவைகளுடன் கதை நிறைகிறது.

1993'ல் வெளிவந்த "சன் இன் லா" படத்தை ஸ்டீவ் ராஷ் இயக்கினார். பாவ்லி ஷோர் மற்றும் கார்லா குகினோ இருவரின் அற்புத நடிப்பில் ஒரு சுமாரான பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படமாக இந்த Son-In-Law படம் அமைந்தது.


மேலதிகத் தகவல்களுக்கு: http://en.wikipedia.org/wiki/Son_in_Law

2 comments:

Prasanna said...

Yov, vaayela nalla varudhuya.. yenga indhaalavuku nalla irukaenu padicha, english padam vimarsanama?

வேதாளம் said...

இது எந்த பட விமர்சனம். மாப்பிள்ளை இவ்ளோ நல்லாவா இருக்கு?

Related Posts Plugin for WordPress, Blogger...